×

தமிழ் நாட்டின் மீது ஒன்றிய அரசின் ‘அதீத’ அக்கறை 2 முறை பாஜ ஆட்சி ஓடிப்போச்சு…எய்ம்ஸ் பணிகள் என்ன ஆச்சு: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ‘ஷாக்’

சிறப்பு செய்தி

கடந்த 2015, பிப்ரவரியில் பாஜ அரசின் பட்ஜெட் தாக்கலின்போது தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்பேரில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க செங்கிப்பட்டி (தஞ்சை), செங்கல்பட்டு, புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு), தோப்பூர் (மதுரை) ஆகிய 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஒன்றிய அரசின் குழுவினர் பார்வையிட்டதில், 200 ஏக்கருக்கும் அதிகமாக நிலம், சாலை, ரயில், குடிநீர், விமான போக்குவரத்து வசதிகள், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 5 இடங்களிலும் மதுரையே தேர்வானது. ரூ.1,265 கோடி நிதியில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என 2018, ஜூனில் முடிவானது. எய்ம்ஸ் தங்கள் தொகுதியில் அமைய வேண்டுமென்ற அப்போதைய அதிமுக அமைச்சர்கள் சிலரது சுயநலத்தால், எய்ம்ஸ் இடம் தேர்விலேயே 3 ஆண்டுகள் வீணானது. அதன் பிறகு 6 மாதங்கள் கழித்தே ஒன்றிய அமைச்சரவை மதுரை எய்ம்ஸ்க்கு ஒப்புதல் தந்தது. 2019ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, 27.1.2019ல் அடிக்கல் நாட்டி, 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வருமெனவும் அறிவித்தார். ஆனாலோ சுற்றுச்சுவர் கட்டும் பணி கூட முழுமை பெறவில்லை.

இந்த சூழலில், அப்போதைய அதிமுக அரசு மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என ஒன்றிய பாஜ அரசு பகிரங்க குற்றம் சாட்டியது. தொடர் இழுபறி நீடித்ததால் ஐகோர்ட் மதுரை கிளையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது ஒன்றிய அரசு, அதிமுக அரசு தரப்பில் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். இறுதியாக அப்போதைய தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் 2020, நவ. 3ம் தேதி மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்ட அத்தாட்சியை வழங்கியது. அதைப்பார்த்த நீதிபதிகள் மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்ட அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், கட்டுமானப்பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கடந்த மார்ச், 2021ல் செய்யப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 2021ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ரூ.1,978 கோடியில் கட்டுமான பணிகள் 2023ம் ஆண்டு துவக்கி, 2026ல் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. கடந்த ஆக. 10ம் தேதி மக்களவையில் திமுக எம்பிக்கள், ‘‘5 ஆண்டுகளாகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் எப்போ வரும்’’ என்று கேள்வி எழுப்பி கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தாமதித்ததால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த தாமதத்திற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ.1,977.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும்’’ என்றார். இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘‘2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் சொல்கிறார். ஆனால் 4 வருடங்களுக்கு முன், நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாத பணிக்கு எப்படி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அந்த இடம் மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்தது. அதனை ஒன்றிய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி உள்ளார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், ஒன்றிய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது 2021ல் திமுக அரசு அமைவதற்கு முன்பே நடந்தது. இப்படி தவறான தகவலை ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’’ என்றார்.

ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்படுமென கூறி வந்த நிலையில், புதிய தகவல் போல 950 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படுவதாக கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தன் பங்குக்கு குழப்பினார். மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு, 8 ஆண்டுகள் நகர்ந்திருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் காட்டாமல், இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பை ராமநாதபுரத்தில் துவக்கி தற்காலிகமாக நடத்தி வருவதே ஒன்றிய அரசின் உச்சபட்ச கூத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒரு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. அதில், மதுரை எய்ஸ்ம் நிலை என்ன என்று பாருங்கள்… முதல்கட்ட பணிகள் முடிந்துள்ளன. திட்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டள்ளது. முக்கிய திட்டம் முடிவாகியுள்ளது. முக்கிய பணிக்கான டெண்டர், டெம்பரவரி கேம்பசில் எம்பிபிஎஸ் வகுப்பு துவங்கிப்பட்டுள்ளது. இதுதான் 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசு செய்த பணிகள். ஆனால், மதுரை எய்ம்ஸோட அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் பணிகள் முடிவடைந்து மருத்துவமனையும் திறக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்சுக்கு பின்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்சுகளின் கட்டுமான பணிகளும் நிறைவடைந்து உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் எய்ம்ஸை மட்டும் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. பாஜ ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம், பாஜவின் 2 முறை ஆட்சியையும் வெற்றிக்கரமாக முடித்து உள்ளது. ஆனால், எய்ம்ஸ்தான் இன்னும் கண்ணுக்கு தெரியல… அந்த பில்டிங்கை பார்க்க இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம்.

* பிரதமர் பேச்சு… காத்துல போச்சு…

பிரதமர் மோடி 2019ல் பிரதமர் அடிக்கல் நாட்டும்போது, எய்ம்ஸ் 2022க்குள் கட்டி முடிக்கப்படும் என்றார். 2023லாவது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், 2023ம் ஆண்டு அக்டோபரில்தான் பணிகளே தொடங்கும் என்று தெரிவித்து தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய அரசு. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024லாவது துவங்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அப்படியே துவங்கினாலும் 2026ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரூ.1,264 கோடியில் தொடங்கிய திட்ட மதிப்பீடு, தற்போது ரூ.1,978 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிகள் ஆரம்பிக்கும்போது
இறுதியாக எவ்வளவு உயருமென கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

* அள்ளி விட்ட ஜே.பி.நட்டாவும்…அதிகமாக்கிய அண்ணாமலையும்…

மதுரை எய்ம்ஸ்க்கு ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்காத நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் மதுரை வந்த பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக பேசி மிரள வைத்தார். காம்பவுண்ட் சுவர் பணிகளே 95 சதவீதம் தான் முடிந்திருக்கிறது. இவர் கட்டுமான பணியே 95 சதவீதம் முடிவடைந்ததாக கூறியது நகைப்பை கொடுத்தது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலையோ, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என போகிற போக்கில் ஒரு குண்டை வீசி விட்டு சென்றார். எய்ம்ஸ்க்கு நிதியே ரூ.1,978 கோடி என்ற நிலையில், எந்த அடிப்படையில் ரூ.2,600 கோடியில் அமைகிறது என அண்ணாமலை கூறினார் என தெரியவில்லை.

The post தமிழ் நாட்டின் மீது ஒன்றிய அரசின் ‘அதீத’ அக்கறை 2 முறை பாஜ ஆட்சி ஓடிப்போச்சு…எய்ம்ஸ் பணிகள் என்ன ஆச்சு: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ‘ஷாக்’ appeared first on Dinakaran.

Tags : EU government's' ,Bahia ,Bajaj Government ,AIIMS Hospital ,Tamil Nadu ,AIIMS ,Parliament ,Dinakaran ,
× RELATED முந்தைய 9 ஆண்டுகளை விட பாஜ ஆட்சியில்...