×

திருப்பரங்குன்றம் பகுதியில் வாழை, வெற்றிலையில் வாடல் நோய் தாக்குதல் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

 

திருப்பரங்குன்றம், டிச. 10: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில், வாழை மற்றும் வெற்றிலை கொடிகளில் ஏற்பட்ட வாடல் நோய் குறித்து, தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ள அச்சம்பத்து, ஐராவதநல்லூர், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் வாழை மற்றும் வெற்றிலை பயிர்கள் ஒருவித நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக விவசாயிகள் கூறினர். இதுகுறித்து தோட்டக்கலை துறைக்கும் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலான குழுவினர் விவசாய நிலங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: இப்பகுதிகளில் உள்ள வாழை மற்றும் வெற்றிலையில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவற்றின் இலை நுணிகள் ஒருவித மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. எனவே, தாக்குதலுக்குள்ளான பயிர்களை உடனடியாக வேரோடு அழித்துவிட வேண்டும். இல்லையெனில் இது அடுத்தடுத்து செடிகளுக்கும் பரவும் தன்மையுடையது. இந்த நோய் மழை காலங்களில் தண்ணீர் வடிய முடியாத நிலப்பகுதிகளில் உள்ள பயிர்களை மட்டுமே தாக்கும். இதனால் மழை நீர் வடிய தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், வேப்பம் புண்ணாக்கு இடுவது, வயல் ஓரங்களில் செண்டு மல்லி நடுதல், புங்கன் புண்ணாக்கு இடுதல், எருக்கு மற்றும் வேம்பு இலைகளை மடக்கி உழுதல் ஆகியவற்றின் மூலமும் சரியான மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமும் இத்தாக்குதலை தடுக்கலாம். வாடல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள, விவசாயிகள் திருப்பரங்குன்றம் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

 

The post திருப்பரங்குன்றம் பகுதியில் வாழை, வெற்றிலையில் வாடல் நோய் தாக்குதல் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruparangundaram ,Thirupparangunaram ,Thirupparangundaram ,Vetal Disease Attack ,Trivandrum ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலம்