×

மழைநீர் வடிகால் கட்டாமல் இருந்திருந்தால் சென்னை 10,20 நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: மழைநீர் வடிகால் கட்டாமல் இருந்திருந்தால் சென்னை 10, 20 நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் என்று தயாநிதி மாறன் எம்பி கூறியுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று காலை நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அளித்த பேட்டி:

இது வரை சென்னை பார்த்திராத பெரும் மழையை நாம் பார்த்தோம். அதனால், எதிர்பாராத விதமான இயற்கையின் சீற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சென்னையில் மழைநீர் கால்வாய்களை கட்டியதால், ஒன்னரை நாளில் 90 சதவீதம் பகுதிகளில் மழை நீர் வடிந்து விட்டது. 2015ல் பாத்தீர்கள் என்றால் மழைநீர் வடிய கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆனது. எங்களை தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி தொடர்ந்து நிவாரண உதவிகளை எங்களால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக மத்திய சென்னையில் 100 சதவீதம் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்கசிவு ஏற்பட்டு எந்த உயிர் பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால், நாங்கள் முன்எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறோம்.

சென்னை முழுவதும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக மழைநீர் வடிகால்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். ஆனால், கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு முன்பு கூட இவ்வளவு மழை பெய்யவில்லை. 20 சென்டி மீட்டர் அளவுக்கு தாங்கக்கூடிய மழைநீர் கால்வாய்களை பண்ணினோம். பெய்ததோ 48 சென்டி மீட்டர் அளவுக்கு மழை. இது பேய் மழை. சென்னை மாவட்டத்துக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள 3 மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது. ஆயினும் இந்த வடிகால்வாய் கட்டாவிட்டால் சென்னை இன்னும் கிட்டத்தட்ட 10, 20 நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும். இப்போது பல முக்கால்வாசி இடங்களிலே அடுத்த 24 மணி நேரத்திலே தண்ணீர் வடிந்து விட்டது.

சென்னை இன்றைக்கு சகஜ நிலைக்கு வந்து விட்டது. இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை தான். ஆயினும் இந்த மாதிரி மழை எதிர்பாராத மழை. ஒவ்வொரு 8 ஆண்டு, 10 ஆண்டுக்கு ஒரு முறை பெருமழை பெய்து வருகிறது. இதற்கு கண்டிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post மழைநீர் வடிகால் கட்டாமல் இருந்திருந்தால் சென்னை 10,20 நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dayaniti Maran ,Tayaniti Maran ,
× RELATED சென்னை – ஹவுரா ரயிலில் முன்பதிவு...