×

தெளிவான மன அமைதிக்கு இந்த நாமம்

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

பத்ம ராக சிலாதர்ச பரிபாவி கபோலபூஹ்

லலிதா சஹஸ்ரநாமத்தின் அர்த்தத்தை பார்த்துக் கொண்டே வருகின்றோம். ஒவ்வொரு நாமத்தின் பொருளையும் கேட்கும் முன்பு சென்ற நாமத்தின் பொருளையும் ஒருமுறை கேட்டு விடுதல் நல்லது. ஏனெனில், இந்த சஹஸ்ர நாமத்தின் அமைப்பே தொகுப்பு தொகுப்பாக அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட உவமையையோ அல்லது உருவகத்தையோ சொல்லிச் சொல்லி அதன் அடியாழத்தில் ஒரு ஜீவன் மேற்கொள்ளவிருக்கும் ஆத்மீக யாத்திரையின் பாதையையும் காட்டுகின்றன.

அந்த பாதையை நீங்கள் வெறுமே அறிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கின்றன. உடனே, நாம் ஏதாவது செய்து அந்த பாதையில் பயணிக்க வேண்டும். என்னால் ஏன் இந்தப் பாதையில் பயணிக்க முடியவில்லை. உடனே, என்னால் ஜபம் செய்ய முடியவில்லை. எனக்கு நேரமில்லை. நான் எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு இந்த ஆன்மிக வாழ்க்கையில் தொடருவேன் என்றெல்லாம் நமக்குள் ஓயாத போராட்டம் போய்க் கொண்டே இருக்கின்றன. அதனால், அது தியானமோ ஜபமோ, ஆத்மிக சாதனையோ எல்லாவற்றையும்விட கேட்பதுதான் முக்கியம். ஒரு கட்டத்தில் அதுவே மேலான புரிதலை வெறும் வார்த்தையாகக் கொடுக்காமல் புத்திப்பூர்வமாக கொடுத்துவிடும்.

எனவே, சஹஸ்ரநாமத்தைச் சொல்வதும் அதன் அர்த்தத்தை கேட்பதுமே முக்கியமாகும். லலிதா சஹஸ்ரநாமத்தை நீங்கள் லௌகீகமான உலகாயத விஷயங்களை வேண்டி இந்த சஹஸ்ரநாமத்தை தொடங்கினாலும், அது உங்களை உள்முகமாக மலர வைக்கவே முயலும். ஏதேனும் ஒருவிதத்தில் உங்களுக்கு இந்த நாமங்களின் உட்பொருளை வார்த்தைகளாகவோ அல்லது தரிசனமாகவோ காட்டும். அதேபோல, ஒவ்வொரு நாமத்தின் அர்த்தத்தை கேட்பதற்கு முன்னர், அதில் உள்ள நாமத்தின் பொருளையும் ஒருமுறை கேட்டுவிட்டு இந்த நாமத்தின் பொருளை கேட்டால், நீங்கள் இரண்டுக்கும் உள்ள தொடர்பை தீர்க்கமாகவும் ஆழமாகவும் அறியமுடியும். வாருங்கள் இப்போது பார்க்கலாம்.

சென்ற நாமத்தில் `தாடங்க யுகலீபூத தபன உடுப மண்டலாஞ்’ என்கிற நாமத்தில் அம்பிகை சூரிய மண்டலத்தையும் சந்திர மண்டலத்தையும் இரண்டுஜோடி தோடுகள் போல தனது காதுகளில் தாடங்கமாக சூடியிருக்கிறாள் என்று இதனுடைய சாமானிய அர்த்தத்தை பார்த்தோம். அதனுடைய தத்துவ விசேஷ அர்த்தமாக மனனம் என்கிற விஷயத்தையும் பார்த்தோம் அல்லவா..! இப்போது இதற்கு அடுத்த நாமத்தைப் பார்ப்போமா!

`பத்ம ராக சிலா தர்ச பரிபாவி
கபோலபூஹ்’

காதில் சொருகி இருக்கக்கூடிய மலர்க்கொத்து, பிறகு காதில் அணிந்திருக்கக் கூடிய தாடங்கம் என்று அப்படியே சொல்லிக் கொண்டே வரும்போது அந்த காதில் அணிந்து கொண்டிருக்கும் தாடங்கம் என்று சொல்லிக் கொண்டே வருகின்றாள். அந்த தாடங்கத்தை காதில் அணிந்திருந்தாலும் அது அவ்வப்போது கன்னத்தை உரசிக்கொண்டே இருக்கின்றது. அப்போது நாம் தாடங்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது கன்னத்தை பார்க்கின்றோம். கபோலம் என்றால் கன்னம் என்று பொருள். இப்போது அந்த கன்னத்தின் தரிசனம் கிடைக்கின்றது.

இப்போது அந்த கன்னங்கள் எப்படி இருக்கின்றன எனில், பத்ம ராகத்தால் செய்யப் பட்டுள்ள கண்ணாடிக்கு மிக்கதான அழகு வாய்ந்த கன்னங்களை உடையவள். பத்ம ராகம் என்பது சிவந்த நிறமான ரத்தினம். இதுபோல கன்னத்தை உடையவள் என்று சொன்னாலும் வசின்யாதி வாக் தேவதைகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில், இந்த ரத்தினங்களெல்லாம் கொஞ்சம் கடினமானது. பத்ம ராகம்போன்ற கன்னங்கள் என்று சொல்லிவிட்டால் அது கடினமானது என்று அர்த்தம் வந்துவிடும். அதனால், பத்ம ராகத்தைப்போல சிவந்த நிறமுடையது.

ஆனால், அதே நேரத்தில் பத்ம ராகம் என்கிற ரத்தினம் அந்த ரத்தினத்திலேயே ஒரு கண்ணாடி செய்தால் எப்படியிருக்கும். பத்மராகக் கல்லில், கல்லை கல்லாக வைக்காமல் கண்ணாடி மாதிரி செய்தால் வழுவழு என்று மென்மையாக இருக்கும். அதுபோல, பத்மராக ரத்தினத்தால் செய்யப்பட்ட கன்னங்களை உடையவள். மேலே சொல்லப்பட்ட நாமத்தின் பொதுவான பொருள் இது. இதில் அத்யாத்மமாக ஆழமாகச் சென்று பார்க்கும்போது இதற்கு முந்தைய நாமத்தில் சிரவணம், மனனன் என்று பார்த்தோம்.

இந்த நாமத்திற்கு வரும்போது கண்ணாடி போன்ற கன்னங்களை உடையவள் என்பதால், இந்த இடத்தில் அந்த ஆத்ம சாதகன் தன்னைத்தானே தரிசிக்கக் கூடிய எப்படி கண்ணாடியில் நம் உருவத்தை நாமே பார்க்கிறோமோ, அதுபோல தன்னைத்தானே தரிசிக்கக் கூடிய நிதித்யாசனம் இந்த இடத்திற்கு வருகின்றது.

`கதம்ப மஞ்சரி க்லுப்த கர்ணபூர மனோஹரா’ என்கிற இடத்தில் ஸ்ரவணத்தை தொடங்கி, `தாடங்க யுகலீபூத தபன உடுப மண்டலா’ என்கிற நாமத்தில் மனனத்தைச் சொல்லி, பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபூஹ் வரும்போது self-realisation அல்லது தன்னைத்தானே, தானே ஆத்ம வஸ்துவாக இருக்கின்றோம் என்று தரிசிக்கக் கூடிய நிதித்யாசனம் நடக்கின்றது.

ஒரு ஆத்ம சாதகன் குருவின் வாக்கியத்தையோ அல்லது அம்பிகையின் நாமத்தையோ சிரவணம் செய்து மனனம் என்கிற நிலையை எய்தும்போது இந்த பிரபஞ்சத்தை நிறைத்துக் கொண்டிருக்கும் விராட் புருஷனை உணருகின்றான். அப்படி உணர்ந்தவுடன் நிதித்யாசனத்திற்கு போகும்போது என்ன நடக்கிறதெனில், அது வேறு தான் வேறு அல்ல என்கிற தன்னையே அங்கு பார்க்கின்றான். God realisation is not different from self-realisation. ஆத்ம தரிசனமே அம்பிகையின் தரிசனம். ஏனெனில், ஆத்மாவாக இருப்பதே அம்பிகைதான்.

கண்ணாடியில் தெரியக் கூடிய பிம்பத்தின் மூல பிம்பம் எதுவென்று பார்த்தால் அதுவே லலிதாம்பிகை. தன்னை உணரும்போது தன் தலைவனையும் உணர்ந்து விடலாம் என்பதற்கு பொருளும் இதுதான். இந்த கண்ணாடியில் நம்மை நாமே பார்ப்பதைத்தான், தனக்குள் தானே தானாக இருப்பதை பார்ப்பதைத்தான் வேதாந்த பரிபாஷையில் நிதித்யாசனம் என்று சொல்கிறோம். நிதித்யாசனம் என்பதை மிகச் சரியாக சொல்ல வேண்டுமெனில், firmly established. நிதித்யாசனம் என்கிற தெளிவு அம்பிகையினுடைய கன்னங்களாக நமக்கு பிரகாசிக்கின்றது.

சிவந்த கன்னங்கள் என்பதில் செம்மை, சிவந்த என்பதற்கு சிதானந்த நாதர் கொடுக்கும் வேதாந்த அர்த்தம் என்னவெனில், ஆத்ம கோசர அகண்டாகார விருத்தி என்பதாகும். வாசகர்களே, இந்த அர்த்தங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை கேட்டு தெளிவடையுங்கள். சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்றால் என்ன என்று அமைதியாக உங்களுக்கு நீங்களே பிரார்த்தனை வடிவில் கேட்டுக் கொள்ளுங்கள். அம்பிகை உங்களுக்கு உணர்த்துவாள்.

(சக்தி சுழலும்)

இந்த நாமத்திற்கான கோயில்

இந்த நாமத்திற்கான கோயிலை நாம் ஆண்டாளிடமே பெறலாம். வில்லிபுத்தூரில் தட்டொளி எனப்படும் வெண்கலத்தட்டிலும், அருகிலுள்ள கிணற்று நீரிலும் பார்த்துக் கொள்வாளாம். தன்னைத்தானே அழகு செய்து கொண்டு, பெருமாளுக்கு சாற்றும் மாலையை தானும் அணிந்து கொண்டு தன் அழகை பார்ப்பாளாம். அங்கு ஆண்டாள் தன் அழகையை பார்த்தாள் அவளுக்குள் இருக்கும் பெருமாளின் திவ்ய வடிவழகைத்தானே கண்டாள். இன்றும் பெருமாள் கோயிலில் கண்ணாடி அறை என்று வைத்திருப்பார்கள். அங்கு சென்று வீட்டில் நம்மை நாமே பார்த்துக் கொள்ளாமல் நமக்குள் இலகும் ஆத்ம வஸ்துவையே பார்க்க வேண்டும்.

The post தெளிவான மன அமைதிக்கு இந்த நாமம் appeared first on Dinakaran.

Tags : Adi Shakti ,Ramya Vasudevan ,Krishna Padma Raga ,Siladharsa Paribhavi… ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி