×

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: பூசாரியின் உதவியாளர் மரணத்தால் நடை திறப்பு தாமதம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று காலை தரிசனத்துக்காக வந்த பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது. இதற்கிடையே கோயில் பூசாரியின் உதவியாளர் நேற்று அதிகாலை அவரது அறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. அதையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே கும்பகோணத்தை சேர்ந்த ராம்குமார் (43) சபரிமலை கோயில் கீழ்சாந்தியின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கோயில் அருகே உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். தினமும் அதிகாலையில் சபரிமலை கோயில் நடை திறக்கும்போது இவரும் செல்வது வழக்கம். நேற்று காலை ராம்குமார் எழுந்திருக்கவில்லை. இதனால் மற்ற கோயில் ஊழியர்கள் சென்று பார்த்தபோது ராம்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக அவரை சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து சுத்திகிரியை பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் 20 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 3.20 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. நேற்று தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அதிகாலை நடை திறப்பதற்கு 20 நிமிடங்கள் தாமதமானதால் 18ம்படி முன் பக்தர்களின் மிக நீண்ட வரிசை காணப்பட்டது.

டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சபரிமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்தர்கள் தரிசனம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. பக்தர்களை கட்டுப்படுத்த போதிய போலீசார், அதிகாரிகள் இல்லாதது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த விவரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சபரிமலையில் நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மற்றும் கேரள டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: பூசாரியின் உதவியாளர் மரணத்தால் நடை திறப்பு தாமதம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...