×

சாலையில் தேங்கிய நீர், விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சென்னையின் 603 வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் சீராக இயக்கம்: மின்சார ரயில்களும் வழக்கம்போல் ஓடுகிறது

சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக விமானம், பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் பெரும்பாலான சாலைகளில் இருந்த தண்ணீர் வடிந்ததாலும், சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாலும் சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து சீராகியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் தற்போது மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில், தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 2 நாட்களாக பொது விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் ஏராளமானோர் அலுவலகம் சென்றதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆனால், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரிகள் நிரம்பி வழிந்ததால் ரேடியல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் தாம்பரம், பல்லாவரம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. இதேபோல், சென்னை புறநகர் ரயில் சேவையும் நேற்று முதல் வழக்கம் போல் செயல்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி பறக்கும் ரயில் ஆகியவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல்- கடற்கரை- சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூரில் இருந்து சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுகிறது.

The post சாலையில் தேங்கிய நீர், விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சென்னையின் 603 வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் சீராக இயக்கம்: மின்சார ரயில்களும் வழக்கம்போல் ஓடுகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Migjam ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...