×

தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார் : பெண்களுக்கான இலவச பஸ் சேவை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு ஒப்புதல்!!

திருமலை: தெலங்கானாவில் 9 அமைச்சர்களுடன் ரேவந்த்ரெட்டி முதலமைச்சராக இன்று பதவியேற்றார். ஆந்திராவில் கடந்த 9 ஆண்டுகளாக சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடந்து வந்தது.ஆனால் சந்திரசேகரராவ் மீது பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 30ம்தேதி தெலங்கானா சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 119 தொகுதிகளில் சந்திரசேகரராவ் கட்சி தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64, அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களையும், பாஜக 8, எம்ஐஎம் 7 இடங்களும் பிடித்தது. இதன்மூலம் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர்.இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது. பகல் 1.05 மணிக்கு நடந்த இந்த விழாவில் முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் பதவியேற்ற பின்னர் துணை முதல்வராக பட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள் உத்தம்குமார், கோமட்ரெட்டி வெங்கட்ரெட்டி, ஸ்ரீதர்பாபு, சீதக்கா, கொண்டாசுரேக்கா, தும்மலநாகேஸ்வரராவ், ஜூபள்ளி கிருஷ்ணாராவ், பொன்னம் பிரபாகர், தாமோதர ராஜநரசிம்மா உள்ளிட்ட 9 பேர் பதவியேற்றனர்.

பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்ற ரேவந்த்ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தை போன்று பெண்களுக்கான இலவச பஸ் சேவை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதால் 6 திட்டங்களை ஏற்று கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.

The post தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவியேற்றார் : பெண்களுக்கான இலவச பஸ் சேவை உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Revandretti ,Telangana ,Tirumalai ,Chief Minister ,CHANDRASEKHARARA ,ANDRA ,
× RELATED தெலங்கானாவில் பரபரப்பு சிறுமியை...