காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழை காரணமாக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிக்ஜாம் புயல் உருவாகி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த பலத்த மழையால் காஞ்சிபுரம் அடுத்த காஞ்சிபுரம் வட்டத்தில் கோவிந்தவாடி அகரம், ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், பரந்தூர், வேளியூர், களியனூர், வையாவூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர், பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 1500 ஏக்கர், வாலாஜாபாத் வட்டத்தில் 1600 ஏக்கர், உத்திரமேரூர் வட்டத்தில் 350 ஏக்கர், குன்றத்தூர் வட்டத்தில் 600 ஏக்கர் மற்றும் காய்கறி பயிர்கள் 450 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மூன்று போகமும் நெல் சாகுபடி செய்யும் இப்பகுதியில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ₹40 ஆயிரம், காய்கறி பயிருக்கு ஏக்கருக்கு ₹50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். கிராமங்களில் வேளாண் துறை, வருவாய் துறை கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டு வேலையில்லாமல் இருக்கும் ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நேரு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர் கன மழை காரணமாக செங்கை, காஞ்சியில் 639 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை காரணமாக 639 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கன மழை என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது தொடர்ந்து கன மழை பெய்யும் அறிவித்திருந்தது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7, 8 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் சின்னம் காரணமாக காஞ்சிபுரம், பெரும்புதூர் குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வந்த மழையினால் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர் வரத்து வந்துக்கொண்டு இருக்கிறது. மழையின் காரணமாக உள்ளாவூர் மதகு ஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கல், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய வெங்கச்சேரி, பழைய சீவரம் உள்ளிட்ட சிறிய ஏரிகள் என மொத்தம் 639 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கின்றன. இதில், மேற்கூறிய 100 சதவீதம் 203 ஏரிகள் நிரம்பின. 44 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியது. 94 ஏரிகள் 50 சதவீதமும், 40 ஏரிகள் சதவீதமும் 25 சதவீதமும் எட்டி உள்ளது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 436 ஏரிகள் 100 சதவீதமும், 57 ஏரிகள் 75 சதவீதமும், 18 ஏரிகள் 50 சதவீதமும், 16 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மேலும், குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான ஏரி, செங்கல்பட்டு – கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 15 பெரிய ஏரிகளில் 11 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதில், சில ஏரிகளில் உபரி நீர் வெளியாகி வருகிறது.
The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் வேதனை; நஷ்டஈடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.
