×

3 நாளாக மின்தடை: மக்கள் மறியல்


துரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த சின்னாண்டி குப்பத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈஞ்சம்பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.

தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் மின்சாரம் விநியோகிக்கப்படாததை கண்டித்து, வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர், மணலி, எண்ணூர் தங்கசாலை, பாரிமுனை, மூலக்கொத்தளம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள், வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மின்சாரம் விநியோகித்தால்தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர், இதேபோல் ஆர்கே நகர் தொகுதியில் பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

The post 3 நாளாக மின்தடை: மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Chinnandi Kuppam ,Neelangara ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி...