![]()
* பேருந்துகள், வாகனங்கள் ஓட தொடங்கின
* சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பை தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், சென்னை சாலைகளில் நேற்று காலை முதல் பேருந்துகள், வாகனங்கள் ஓடத் தொடங்கின. சில இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் மழை காரணமாக, சென்னை முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிந்துவிட்டாலும், இன்னமும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் நான்கு அடி அளவுக்கு இருந்தது.
இந்நிலையில், ெசன்னையில் மழைநீர் வடிந்த சாலைகளில் தூய்மை பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்களும் இணைந்து இரவு பகலாக களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மிக்ஜாம் புயலுக்கு பிறகு சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வடிந்து விட்டதால் மாநகர பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து, பலர் வேலைக்கு கிளம்பி விட்டனர். கடந்த 4 நாட்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் தற்போது வெளிவர தொடங்கி விட்டனர்.
தங்கள் அன்றாட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டதால், பலர் தங்கள் வாகனங்களில் நேற்று காலை முதல் பயணித்தனர். ஒரு சில இடங்களில் இன்னும் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதிகளை வாகனங்கள் கடப்பது சிரமமாக உள்ளது. மேலும் மழைநீர் அகற்றும் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத இயந்திரங்களுடன் களப்பணியாற்றி வருகின்றனர். சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதுபோன்ற பணிகளால் கிட்டத்தட்ட சென்னை முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
நேற்று காலை நேரத்தில் பலர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்ததை காண முடிந்தது. இதை சரி செய்யும் பணியில் ேபாக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
The post தாழ்வான பகுதி, பல சாலைகளில் 4 அடிக்கு தண்ணீர் தேங்கியது: இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை appeared first on Dinakaran.
