×

இப்போது இருந்தால் பாராட்டியிருப்பார்; ராகுல் மீது பிரணாப் முகர்ஜி நம்பிக்கை இழந்தது ஏன்?: மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தகவல்

புதுடெல்லி: ராகுல்காந்தி மீது பிரணாப் முகர்ஜி நம்பிக்கை இழந்தது ஏன் என்று அவரது மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தெரிவித்து உள்ளார். 2013ம் ஆண்டு எம்பி, எம்எல்ஏக்கள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 3 மாதம் அவகாசம் வழங்கும் அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதாவை கிழித்தெறிந்த ராகுல்காந்தி, அவகாசம் வழங்குவது முழுமுட்டாள் தனம் என்று விமர்சனம் செய்தார். அப்போது மன்மோகன்சிங் அரசின் அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி மிகவும் கோபம் அடைந்ததாக அவரது மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி எழுதிய,’ பிரணாப் மை பாதர்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ எனது தந்தைக்கும், ராகுலுக்கும் இடையே உரிய சந்திப்பு நடக்கவில்லை. அதில் பல குழப்பங்கள் இருந்தன. சந்திப்பு பற்றி அடிக்கடி மறந்து விடுவதும் ஒரு காரணமாக அமைந்தது. இதனால் கட்சியை, நாட்டை ராகுல் வழிநடத்தும் திறன் குறித்து எனது தந்தை அப்போது நம்பிக்கை இழந்தார்.

எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க மசோதா கிழித்தெறிந்த தகவல் அறிந்ததும் எனது தந்தை மகிழ்ச்சியடையவில்லை. ஆம், நான்தான் அவருக்கு அந்த செய்தியை தெரிவித்தேன். நீண்ட நாட்களுக்குப்பிறகு அவர் மிகவும் கோபமாக இருந்தார். அவரது முகம் சிவந்து, ‘அவர் யாரென்று நினைக்கிறார். அவர் அமைச்சரவையில் உறுப்பினராக இல்லை. அமைச்சரவையின் முடிவை பகிரங்கமாக குப்பையில் போட அவர் யார். இது முற்றிலும் தேவையற்றது. அரசியல் புத்திசாலித்தனம் இல்லாமல் காந்தி-நேரு பரம்பரையின் அனைத்து ஆணவமும் அவரிடம் உள்ளது. என்று கேட்டார். பின்னர், எனது தந்தை கொள்கையளவில், ராகுல் காந்தி கருத்துதான் சரி என்று ஒப்புக்கொண்டார் என்பதை உணர்ந்தேன்.

ஆனால்,கிழித்தெறியும் அளவுக்கு என்ன அவசரம் என்று அவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அமைதியாக இருந்தார். அன்றிலிருந்து ராகுல் காந்தி மீது எனது தந்தையின் நம்பிக்கை குறையத் தொடங்கியது என்று நான் நினைக்கிறேன். ராகுல்காந்தி அரசியல் ரீதியாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்று அவர் நினைத்தார். அன்றைய சூழலில் அவர் ராகுல்காந்தியை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் இன்று இருந்தால் நிச்சயம் அவர் ராகுல்காந்தியை பாராட்டி இருப்பார். ராகுலின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது வெளிப்பட்ட முயற்சியை நிச்சயம் பாராட்டியிருப்பார் என்றார்.

பிரதமராக எனது தந்தை ஆசைப்பட்டார்
2004ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு எனது தந்தை ஆசைப்பட்டார் என்று பிரணாப் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ தேர்தல் வெற்றிக்குப்பின்னர் நான் ஒரு நாள் நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்களா? என்று தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், நிச்சயமாக, அவரது மதிப்புள்ள எந்த அரசியல்வாதியும் அதை விரும்புகிறார் என்றார். அப்படியானால், நான் அவரிடம், ‘நீங்கள் ஏன் சோனியா காந்தியிடம் பேசக்கூடாது’ என்று கூறினேன். உடனே அவர், ‘என்ன பேசுவது?’ என்று திருப்பிக்கேட்டார்.

மேலும் அவர் கூறுகையில் ‘அரசியல் உலகில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலனைப் பாதுகாக்கிறார்கள், சோனியா தனக்கு சவால் விடாத ஒருவரை பிரதமராக்குவதன் மூலம் தனது குடும்பத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கலாம்’ என்றார். அதற்கு நான் அப்படியானால்,’ சோனியாவுக்கு எதிரான முடிவை நீங்கள் எடுப்பீர்களா?’ என்று கேட்டேன். அந்த கேள்வியை சாமர்த்தியமாக தவிர்த்த எனது தந்தை,’ அது கேள்வி இல்லை. பிரச்னை என்னவென்றால், நான் எதிரான முடிவை எடுக்கலாம் என்று சோனியா நினைத்தார்’ என்று தெரிவித்தார்.

காலையும் தெரியவில்லை மாலையும் தெரியவில்லை
பிரணாப் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி கூறுகையில்,’ ஒரு நாள் காலையில், முகல் கார்டனில் (இப்போது அம்ரித் உத்யன்) பிரணாப்பின் வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது அவரைப்பார்க்க ​​ராகுல் வந்தார். காலை நடைப்பயிற்சி மற்றும் பூஜையின் போது எந்த இடையூறும் ஏற்படுவதை பிரணாப் விரும்ப மாட்டார். இருப்பினும், அவரைச் சந்திக்க முடிவு செய்தார்.

அதன்பின்தான் ராகுல் உண்மையில் பிரணாப்பை மாலையில் சந்திக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அவரது ராகுலின் அலுவலகம் தவறுதலாக சந்திப்பு காலை என்று அவருக்குத் தெரிவித்தது. இந்தச் சம்பவம் குறித்து பின்னர் நான் அறிந்தேன். நான் கேட்டபோது எனது தந்தை, ‘ராகுலின் அலுவலகத்திற்கு ‘ஏ.எம்.’(காலை), ‘பி.எம்’(மாலை) என்பதை வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒரு நாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள்’ என்று கேலியாக கேட்டார். என்று குறிப்பிட்டார்.

The post இப்போது இருந்தால் பாராட்டியிருப்பார்; ராகுல் மீது பிரணாப் முகர்ஜி நம்பிக்கை இழந்தது ஏன்?: மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Pranab Mukherjee ,Rahul ,Sharmishta Mukherjee ,New Delhi ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED மோடி தொகுதியில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!!