×

ராட்சத கழிவுநீர் குழாய் உடைந்தது அடையாறு திரு.வி.க பாலம் அருகே திடீர் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம் சரி செய்யும் பணி தீவிரம்

சென்னை: அடையாறு திரு.வி.க.பாலம் அருகே திடீரென்று ராட்சத கழிவு நீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை நிலவரப்படி 4000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. குறிப்பாக அடையாறு அருகே அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருவிக பாலம் அருகே வெள்ளம் கரைபுரண்டோடி முகத்துவாரத்தின் வழியாக கடலில் கலக்கிறது.

தற்போது மழை நின்று விட்டதால் போக்குவரத்தை சீர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பலர் இன்று காலை அடையாறு திருவிக பாலத்தின் மீது நின்று கொண்டு வெள்ளம் கரை புரண்டோடுவதை பார்த்துக் ெகாண்டிருந்தனர். அப்போது பாலத்தின் அருகே பூக்கடைகள் வரிசையாக உள்ள பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளம் உருவானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அரசு துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்னை மாகநராட்சி அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதை ஆய்வு செய்த போது, திருவிக பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்சத கழிவுநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாகவே ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் ஊற்றெடுத்து வருவதால் சாலையை ஒட்டியுள்ள கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் பாலத்தை ஒட்டி பள்ளம் உருவாகியிருப்பதால் அதிகாரிகள் அதை மூடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த இடத்தை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். போர்க்கால அடிப்படையில் ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து, அதனால் உருவான பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மக்களின் பாதுகாப்பு கருதி, திருவிக பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு வழியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

The post ராட்சத கழிவுநீர் குழாய் உடைந்தது அடையாறு திரு.வி.க பாலம் அருகே திடீர் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம் சரி செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Adyar Sudden ,T. V. K. Bridge ,CHENNAI ,Adyar Thiru.V.K. Bridge ,T.V.K bridge ,Dinakaran ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...