×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; திருச்சி டிஎஸ்பி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு: சொத்து ஆவணங்கள் சிக்கின

திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் முத்தரசு வீடுகளில் நேற்று லஞ்சஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வீட்டில் இருந்து 25க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், நஞ்சாக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா (50). எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் சென்னையில் பேஷன் டெக்னலாஜி பிரிவில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். மகன், கோவையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் கரூர் மாவட்டம் குளித்தலை, மதுரை, திருச்சி அரியமங்கலம், திருச்சி மாவட்டம் துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக முத்தரசு பணியாற்றி வந்தார். இந்த கால கட்டத்தில் முத்தரசின் வங்கி கணக்கு மற்றும் வாகனங்கள், சொத்து மதிப்புகளை லஞ்சஒழிப்பு துறையினர் ஆய்வு செய்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.

1.4.2014 முதல் முத்தரசு, தனது பெயர் மற்றும் மனைவியின் பெயரில் ₹35,37,548 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, 31.03.2020 ஆண்டில் முத்தரசு மற்றும் அவரது மனைவி பெயரில் வீடுகள், வீட்டுமனைகள் என ₹1,38,47,548 என்ற அளவில் சொத்து மதிப்பு இருந்துள்ளது. இதில் அவர் பெற்ற மாத ஊதியம், அவரது செலவுகள் போக எவ்வளவு சொத்து மதிப்பு இருக்க வேண்டுமோ அதற்கு மேல் அதிகமாக சொத்து மதிப்பு இருப்பது தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது. வருமானத்திற்கு அதிமாக (104.07 சதவீதம்) ₹80,29,450 சொத்து சேர்த்துள்ளதாக லஞ்சஒழிப்பு துறையினர் கடந்த 4ம்தேதி டிஎஸ்பி முத்தரசு மற்றும் அவரது மனைவி மீதும் வழக்குப்பதிந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி உள்பட 10க்கும் மேற்பட்ட லஞ்சஒழிப்பு துறையினர் நேற்று காலை திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள பிரபல குடியிருப்பில் வசித்து வரும் டிஎஸ்பி முத்தரசு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணியளவில் தொடங்கிய சோதனை நேற்று மாலை 5 மணி வரை நீடித்தது. இதில், 25க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களும், 8க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் சிக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக வீட்டில் இருந்த டிஎஸ்பி முத்தரசிடம் லஞ்சஒழிப்பு துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் 10 லாக்கர் கீ அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாக்கர்களில் விரைவில் லஞ்சஒழிப்பு துறையினர் வங்கிகளின் அனுமதி பெற்று சோதனை நடத்த உள்ளனர்.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மதுவிலக்கு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த முத்தரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு நெல்லையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கல்யாணசுந்தரம் நகரிலும் டிஎஸ்பி முத்தரசுக்கு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது.

இதில், கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் வாடகைதாரர்கள் வசித்து வருகின்றனர். இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் முத்தரசு வந்து செல்லும்போது ஓய்வெடுப்பதற்காக அறை உள்ளதாக கூறப்படுகிறது. டிஎஸ்பி முத்தரசு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் நேற்று காலை 6 மணியளவில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

நாகர்கோவில் அதிகாரி வீட்டில் சோதனை: நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழ பள்ளத்தெருவை சேர்ந்தவர் சிவதாணு பிள்ளை. இவர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேவதி (58). இவர், புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். புதுக்கோட்டையில் பணியாற்றி வரும் ரேவதி, மாதம் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஜூலை மாதம், புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேவதி அலுவலகத்தில் தனது அறையில் இருந்தார். அந்த அறையில் நடந்த சோதனையில் இருந்து ₹2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்துக்கு எந்தவித ஆவணங்களும் காட்டப்பட வில்லை. இதை தொடர்ந்து மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டனர். இந்நிலையில் நேற்று காலை நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ரேவதி வீட்டில், புதுக்கோட்டையில் இருந்து வந்த 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை மாலை வரை பல மணி நேரம் நீடித்தது. வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; திருச்சி டிஎஸ்பி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு: சொத்து ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Trichy ,District Crime Division ,DSP ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து