வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ளது கள்ளிக்குடி கிராமத்தில் கண்ணன் என்பவர் வீட்டிற்குள் கடந்த மாதம் 29ம் தேதி புகுந்த மர்மநபர், பீரோவிலிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ₹4 லட்சத்து 42 ஆயிரத்தை திருடிச் சென்றார். இந்த திருட்டில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் கள்ளிக்குடி கிராமத்தில் கண்ணனின் வீடு தவிர அனைத்து வீடுகளுக்கும் ஒரு பை வழங்கப்படும். இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை இப்பகுதியில் அனைத்து தெரு விளக்குகளும் அணைக்கப்படும். அப்போது திருடியவர்கள் பணம், நகையை அந்த பையில் போட்டு கிராம மந்தையில் உள்ள விநாயகர் கோயில் முன் வைக்கப்படும் டிரம்மில் போட்டுச்செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
இதன்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன. நேற்று காலை பொதுமக்கள் கோயில் முன்பாக இருந்த டிரம்மை பார்த்தனர். அதில் எதுவும் இல்லாததால், விரக்தியடைந்தனர். அப்போது பணம், நகையுடன் ஒரு பை கண்ணன் வீட்டிற்கு வெளியே கிடப்பது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டியில் ஒரு வீட்டில் திருடுப்போன 26 பவுன் மற்றும் ரூ.20 ஆயிரத்து 500 பணம் அண்டா வைத்து இதேபோல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post கைகொடுத்தது ‘அண்டா பார்முலா’திருடுபோன பணம், நகைகள் நள்ளிரவில் வீடு தேடி வந்தது appeared first on Dinakaran.