×

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்காததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்களால் அம்பலம்

புதுடெல்லி: சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு எதிர்க்கட்சிகளை அனுசரித்து, ஒருங்கிணைத்து போட்டியிடாததே காரணம் என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

2024 மக்களவை பொதுத்தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சி காங்கிரஸ். கூட்டணி என்றாலே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். நான்தான் பெரியவன் என்ற பெரிய அண்ணன் மனப்பான்மை கூட்டணிக்கே வேட்டு வைக்கும். இப்படியெல்லாம் நடக்கமாட்டேன் என்று கூறிதான் இந்தியா கூட்டணியே உருவானது. ஆனால், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் நெருங்கியதும் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் முடங்கியது.

5 மாநில தேர்தலில் அதிக மாநிலங்களை கைப்பற்றி மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அந்த கட்சி நம்பியது. மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசச் சென்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் அவமதித்துவிட்டதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட சில மாநிலங்களில் கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள் மறுத்தனர்.

இந்நிலையில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இவற்றில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தன. அந்த கட்சிகளையும், மற்ற எதிர்க்கட்சிகளையும் காங்கிரஸ் அரவணைத்து போகாததால், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது என்பது தேர்தல் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி,
அதேநேரம் ராஜஸ்தானில் பாஜக 41.69%, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ் 39.53%, ஆம்ஆத்மி 0.38%, ஏஐஎம்ஐஎம் 0.01%, பிஎஸ்பி 1.82%, இடதுசாரிகள் 1.01%, ஆர்எல்டிபி 2.2% வாக்குகள் பெற்றுள்ளன. எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 44.95 சதவீதத்தை தாண்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக 48.61%, காங்கிரஸ் 40.43%, ஆம்ஆத்மி 0.51%, ஏஐஎம்ஐஎம் 0.09%, பிஎஸ்பி 3.35%, இடதுசாரிகள் 0.4%, ஐக்கிய ஜனதா தளம் 0.02%, சமாஜ்வாதி 0.46% வாக்குகள் பெற்றுள்ளன. எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 45 சதவீதத்தை தாண்டியுள்ளது. சட்டீஸ்கரில் பாஜக 46.29%, மற்ற காங்கிரஸ் 42.19 %, ஆம்ஆத்மி 0.93%, பிஎஸ்பி 2.07%, இடதுசாரிகள் 0.43%, சமாஜ்வாடி 0.04% வாக்குகள் பெற்றுள்ளன. எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 45.66 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அரவணைத்து கூட்டு சேர்ந்து சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலில் போட்டியிட்டிருந்தால், பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைத்திருக்க முடியும். மேலும் பாஜக மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளும் குறைந்திருக்கும். இதனால்தான், இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்காததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்களால் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Election Commission ,New Delhi ,Chhattisgarh ,Rajasthan ,Madhya Pradesh ,
× RELATED அஜித் பவாருக்கு கட்சி ஒதுக்கிய...