×

சாலையில் மாடுகள் உலாவினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 27 வார்டு பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் நடமாட்டம் இருந்தால் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்திட மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

இதன்படி வருவாய்த் துறை, காவல்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆகியோர் திருவள்ளூர் நகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.என்.சாலை, சிவிநாயுடு சாலை, ஆயில்மில் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 6 ஜெர்சி கிராஸ், 4 நாட்டு மாடுகள் பிடிக்கப்பட்டன. மருத்துவர் திலகவதி பிடிக்கப்பட்ட மாடுகளை பரிசோதனை செய்தபோது 10 மாடுகளும் நல்ல முறையில் உள்ளதாகவும் கர்ப்பமாக இல்லை எனவும் சான்று வழங்கினார்.

இதன்பின்னர் பிடிபட்ட மாடுகளை பரிசோதனை செய்தபோது வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகர வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர். நகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து முதல் முறை ஆயிரம் ரூபாயும் அதற்கு மேல் தொடர்ந்தால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

காவல்துறை மூலம் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா எச்சரித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி பகுதியில் இதுவரை 175 மாடுகள் நகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.84 ஆயிரத்து 500 அபாரத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 6 மாட்டு உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு உரிமையாளர்கள் மாடுகளை மாட்டு கொட்டகையில் வைத்து பராமரித்திட வேண்டும். அபராத தொகை செலுத்துவது மற்றும் காவல்துறை நடவடிக்கையை தவிர்த்திடும் வகையில் மாடுகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.

The post சாலையில் மாடுகள் உலாவினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Municipal Commissioner ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...