சேலம், டிச. 3: தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் சேலம் மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 76 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை ஊக்கப்படுத்தி, இடைநிற்றலை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அவர்கள் உயர்கல்வியில் சேர்வதை உறுதிசெய்ய நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என, மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ₹ஆயிரம் வீதம், 10 மாதங்களுக்கு ₹10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும். தேர்வு பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 முதல் பட்டப் படிப்பு வரை, இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கான தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்தது. காலையில் முதல் தாளான கணிதமும், மதியம் 2ம் தாளான அறிவியல், சமூக அறிவியல் தேர்வும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் இருந்து 76 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கும், இதற்கான பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் சிஇஓ கபீர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பாண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வை எழுத சேலம் மாவட்டத்தில் இருந்து 2,710 மாணவர்கள், 4,421 மாணவிகள் என மொத்தம் 7,131 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 25 மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு நடந்தது. இதில், மாணவர்கள் 2,350 பேரும், மாணவிகள் 4,132 பேரும் என மொத்தம் 6,482 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 38 மாணவர்கள் மற்றும் 38 மாணவிகள் என மொத்தம் 76 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் இளங்கலை படிப்பு முடியும் வரை வருடத்திற்கு ₹10 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்.
மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வுபெற்று சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை மாவட்டத்தில் 54 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் தேர்வு பெற்றுள்ளவர்களில், 11 மாணவிகள், 19 மாணவர்கள் என மொத்தம் 30 பேர், சேலம் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளியிலிருந்து 3 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதுதவிர, இடைப்பாடி அரசு மகளிர் பள்ளி, தாரமங்கலம் மகளிர் பள்ளி, ஜாகீர்அம்மாபாளையம் அரசுப்பள்ளி, ராமிரெட்டிப்பட்டி அரசுப்பள்ளி, தாண்டவராயபுரம் அரசுப்பள்ளி, வீரபாண்டி மாதிரிப்பள்ளி, அம்மாப்பேட்டை மாநகராட்சி மகளிர் பள்ளி, குகை நகரவை மகளிர் பள்ளியிலிருந்து தலா 2 பேர் தேர்வாகியுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திறனாய்வு தேர்வில் சேலம் மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.