×

போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற மோசடி கும்பல் கைது: நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு


நெல்லை: சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ரமேஷ் மகன் செல்வபாபு (19). இவர் கடந்த தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த தகராறில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் உள்ளார். இவருக்கு ஜாமீன் பெறுவதற்காக நேற்று முன்தினம் சேரன்மகாதேவி நீதிமன்றத்திற்கு பேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த சேக் அலி (46), அவரது மனைவி மெகர்பானு (41) மற்றும் நெல்லை டவுன் சைலப்பர் தெருவைச் சேர்ந்த பரமசிவம் (48) ஆகியோர் வந்தனர்.

பொதுவாக ஜாமீன் பெறுவதற்கு வீட்டு வரி ரசீது, ரேஷன் அட்டை ஆகிய இரண்டு ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதே போன்று இவர்கள் செல்வபாபு ஜாமீனுக்காக சுத்தமல்லி கிராமம் விலாசத்தில் பரமசிவம் மற்றும் சுப்புலெட்சுமி பெயரில் வீட்டுவரி ரசீது கொடுத்துள்ளனர். இதனை ஆய்வு செய்த போது நீதிபதி ராஜலிங்கம், வீட்டுவரி ரசீது போலியானது என்பதை கண்டுபிடித்தார். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட சுப்புலெட்சுமி, பரமசிவம் மற்றும் சேக்அலி ஆகிய 3 பேரையும் சேரன்மகாதேவி போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

சேக் அலி கோடீஸ்வரன் நகரில் உள்ள தனது வீட்டில் பல்வேறு போலி ஆவணங்கள் தயாரித்து 30க்கும் மேற்பட்ட அரசு முத்திரைகள் பொறிக்கப்பட்ட ரப்பர் ஸ்டாம்புகள் மூலம் நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் இதுபோன்று தொடர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் வேறு யார், யாருக்கெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பதை அறிய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக முக்கிய குற்றவாளி சேக் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

The post போலி ஆவணங்கள் மூலம் ஜாமீன் பெற முயன்ற மோசடி கும்பல் கைது: நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie ,Nellai ,Cheranmahadevi ,Nellai court ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...