×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

கோரக்கர் சித்தர் குரு பூஜை
3.12.2023 – ஞாயிறு

சித்தர் பாரம்பரியத்தில், கோரக்கர் 18 சித்தர்களில் ஒருவர். நாகப்பட்டினத்தில் உள்ள வடக்கு பொய்கைநல்லூரில் அவரது ஜீவசமாதி இருக்கிறது. மருதமலையில் ஒரு கோயில் உள்ளது. ஒரு கணக்கின்படி, அவர் தனது இளமையின் பெரும்பகுதியை கோவை வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். கோரக்கரைப் பொறுத்தமட்டில், பல சிவாலயங்கள் உள்ளன; பேரூர், திருச்செந்தூர் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ளது.

கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லிமலை ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றன, அங்கு அவர் தனது சாதனா பயிற்சி செய்ததாக குறிப்பிடப்படுகிறது. அவரது சகாக்களான 18 சித்தர்களைப் போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் தொடர்பான தமிழ்க் கவிதைகளை எழுதியுள்ளார். சந்திரரேகை நூலில், கோரக்கர் தனது எதிர்கால கணிப்புகளை கவிதை வடிவில் எழுதியுள்ளார். அவர் குரு பூஜை இன்று.

3-வது சோம வாரம் 1008 சங்காபிஷேகம்
4.12.2023 – திங்கள்

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம். எல்லா கிரகங்களுக்கும் ஒளி அளிக்கும் சூரியன் தன்னுடைய நீச ராசியான துலா ராசியில் இருந்து வெளியேறுகிறார். அதேநேரம் சூரியனிடமிருந்து ஒளி பெறும் மனோகாரகன், சந்திரன் விருச்சிக ராசியில் நீசம் அடைகிறார். இந்த தோஷத்தை நீக்குவதற்காக சந்திரமௌலீஸ்வரராகிய சிவபெருமானுக்கு சங்குகளில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் நடைபெறும். திருவெண்காடு, திருக்கடவூர், திருவாடானை, திருக்கழுக்குன்றம் முதலிய சிவாலயங்களில் இன்று அதிவிமர்சையாக 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

சங்கு என்பது செல்வத்தின் சின்னம். நிலைபெற்ற மனதைக் குறிப்பது. இயற்கையாகக் கிடைப்பது. வெற்றியின் சின்னம் சங்கு என்பதால் வெற்றி பெற்றவர்கள் சங்கை ஊதி ஒலி எழுப்பிப் கொண்டாடுகிறார்கள். சிவபெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அனல் வடிவமாக அவன் எழுந்த கார்த்திகை மாதத்தில் புனல் எனப்படும் நீரை சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்து, அவருடைய அருளைப் பெறுகிறார்கள்.

இந்த சங்கு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மன தைரியத்தை வளர்க்கும். சந்திரனால் ஏற்படும் தோஷங்களைக் குறைக்கும். 108 அல்லது 1008 சங்குகளை இதற்குப் பயன்படுத்துவார்கள். கலசாபிஷேகம் போல் சங்குகளை பரப்பி வைத்து, நீர் நிரப்பி அபிஷேகம் செய்யும் காட்சியைக் காண்பதே நமக்குப் பெரும் புண்ணியத்தைத் தரும்.

காலபைரவாஷ்டமி
5.12.2023 – செவ்வாய்

இந்த உலகத்தையும் உயிர்களையும் படைத்த இறைவன், தான் படைத்த உலகத்துக்கும் உயிர்களுக்கும் ஆபத்து வருகின்ற பொழுது, தானே தோன்றி அவற்றை நீக்குகின்றான், பயிர்கள் வளரும் பொழுது, நாம் விரும்பாமலேயே பயிர்களோடு சேர்ந்து களையும் வளர்ந்து விடுகிறது. அந்தக் களையைக் கழிக்காவிட்டால் அது பயிர்களை அழித்து விடுகிறது. பயிர்களைக் காப்பாற்ற இறைவன் தக்க கருவிகளைக் கொண்டு களைகளை நீக்குகின்றான். அதைப் போலவே சிவபெருமான் உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அசுர சக்திகளால் அலைக் கழிக்கப்படும் பொழுது, தானே தோன்றி அழிக்கிறார்.

அப்படி அழிப்பதற்காக ஏற்பட்ட உக்கிரமான சிவபெருமானின் வடிவம்தான் பைரவ மூர்த்தி. சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று கால பைரவர் வடிவம். அவருக்கு உரிய திதி எட்டாவது திதியான தேய்பிறை அஷ்டமி திதி. கார்த்திகை மாதத்தில் வருகின்ற அஷ்டமி திதிக்கு காலபைரவாஷ்டமி என்று பெயர். அன்று அந்தி சாயும் நேரத்தில் சிவாலயத்துக்குச் சென்று கால பைரவரை வழிபட வேண்டும். அங்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் பங்கு பெற வேண்டும்.

இதன் மூலமாக சகல கிரக தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம். கால தேவனான எமனின் அச்சுறுத்தல்களில் இருந்து, தம்மை அண்டியவர்களைக் காத்து மரண பயம் நீக்குபவர் இவர். இந்த வழிபாடு உடல் பிணியையும் மனப் பிணியையும் அகற்றும். பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சிகப்பு நிற மலர்களைச் சமர்ப்பித்து, செவ்வாழை பழத்தை நிவேதனமாக படைக்கலாம். தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

மெய்ப் பொருள் நாயனார் குரு பூஜை
6.12.2023 – புதன்

பொய்ப் பொருளிலும், மெய்ப் பொருள் கண்டவர் மெய்ப் பொருள் நாயனார். உலகத்தில் எல்லோரும் பொய்ப் பொருளாகிய பதவி, பட்டம், பணம் என்று தேடி அலையும் போது, மெய்ப் பொருளாகிய சிவபரம்பொருளை சதா சர்வ காலமும் எண்ணியவர் இவர். திருநீறு பூசிய அடியாரைக் கண்டால் சிவனாகவே எண்ணி வணங்கியவர். திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

சிவபெருமானை குலதெய்வமாக வணங்கிய மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். இவர் பெருமை பொறாது இவரோடு பகை பாராட்டிய முத்த நாதன் என்கின்ற சிற்றரசன் இருந்தான். இவரை வாள் போரில் வெல்ல முடியாது எனவே சூது செய்து கொன்றொழிக்க வேண்டும் என்ற கொடிய திட்டத்தைத் தீட்டினான். மெய்ப் பொருள் நாயனாரின் சிவபக்தியை கண்டும், அவர் சிவனடியார்களைக் கண்டால், உடலும் உள்ளமும் குழைந்து ஒடுங்கி வணங்குவதையும் அறிந்த முத்தநாதன், அவரை சாய்க்கும் வழியாக ஒரு சிவனடியாராக வேடம் போடுவது என்று முடிவு செய்தான்.

`மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்’.

– என்று இவன் வேடத்தை சேக்கிழார் பாடுகிறார்.

திருநீறு தரித்து, கையில் ஏடு ஏந்தி, மெய்ப் பொருள் நாயனாரின் அரண் மனைக்குச் சென்றான். சிவ ஆகம நெறியை இப்பொழுதே நான் அரசனுக்குச் செப்ப வேண்டும் என்று காவலர்களை பலவந்தப்படுத்தி அரசரின் தனி அறையினுள்ளே நுழைந்தான். சிவவேடம் தரித்து இருந்தாலும்கூட, சிவனாகவே கருதி மெய்ப் பொருள் நாயனார் முத்தநாதனை வணங்கினார். “யாரும் அறியா சிவ ரகசியத்தை தனியே தங்களுக்குச் சொல்ல வேண்டும். அதனால், யாரும் இங்கே இருக்க கூடாது’’ என்று முத்தநாதன் கேட்க, அரசன் அரசியாரையும் அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு, ஒரு சிறந்த ஆசனத்தை முத்தநாதனுக்கு அளித்துவிட்டு அவனுடைய காலடியில் மெய்ப் பொருள் நாயனார் கை கூப்பி அமர்ந்தார்.

மெய்க் காவலனும் இல்லாத அந்தநேரத்தில் சுவடிக் கட்டைப் பிரிப்பது போல விரித்து அதனுள்ளே மறைத்து வைத்திருந்த கொடிய குறுவாளால் மெய்ப் பொருள் நாயனாரை வெட்டிச் சாய்த்தான். அதைக் கண்ட தத்தன் என்ற மெய்க்காப்பாளன் உடனே உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டுவதற்குப் பாய்ந்து வந்தான். அந்த நிலையிலும் மெய்ப் பொருள் நாயனார் ஒரு சிவனடியாரைக் கொல்வது தகாது என்று ‘‘தத்தனே, நில்… இவர் நம்மைச் சேர்ந்தவர்” என்பதைச் சொல்லி தடுத்தார். அவர் செய்த அடுத்த செயலானது இன்னும் அற்புதமானது.

‘‘தத்தா… இனி இவர் அரண்மனையில் இருக்கும் வரை, இவருடைய உயிருக்கு ஆபத்து. சிவ வேடம் தரித்த எதிரியாக இருந்தாலும்கூட அதற்கு ஒரு மதிப்பு தர வேண்டும். இந்த அடியாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நகரத்துக்கு வெளியே பாதுகாப்பாக விட்டு வர வேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன்’’ என்றார். ஊரே திரண்டு முத்தநாதனை கொல்வதற்கு தயாராக இருந்த நிலையில், அரசரின் ஆணையை எல்லோருக்கும் சொல்லி அமைதிபடுத்திவிட்டு, கனத்த மனதோடு, கொடியவன் முத்தநாதனை, சிவ வேடம் தரித்து இருந்த ஒரே காரணத்தினால், நாட்டிற்கு வெளியே பாதுகாப்பாக விட்டுவிட்டு, கண்ணீருடன் அரண்மனைக்கு திரும்பினான்.

அதுவரை தம்முடைய உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த மெய்ப் பொருள் நாயனார், ‘‘என் வாழ்நாளில் நீ செய்த காரியத்தை இனி வேறொருவர் யார் செய்யப் போகிறார்கள்?’’ என்று கை கூப்பியபடி சிவபதம் அடைந்தார். எதையும் சிவதரிசனமாகவே கண்ட மெய்ப் பொருள் நாயனாரின் குருபூஜை தினம் இன்று. (கார்த்திகை உத்திரம்)

ஆனாய நாயனார் குருபூஜை
7.12.2023 – வியாழன்

நாயன்மார்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தொண்டு புரிந்து சிவனுடைய அன்பையும் அருளையும் பெற்று நிறைவாக சிவபதம் அடைந்தவர்கள். அதில், ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார். ஒரு கொன்றை மரத்தை சிவனாகவே கருதி பூஜை செய்து தம்முடைய குழல் ஓசையால் சிவனை மகிழ்வித்து சிவபுண்ணியம் தேடியவர். பிறந்த ஊர் சோழநாட்டில் திருமங்கலம். அவருடைய குருபூஜை தினம் கார்த்திகை ஹஸ்தம் (இன்று).

சர்வ ஏகாதசி
8.12.2023 – வெள்ளி

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு கதை உண்டு. முசுகுந்தன் என்ற அரசன் தன்னுடைய நாட்டில் ஏகாதசி விரதத்தை எல்லோருக்குமான விரதமாக மாற்றி கடைப்பிடிக்கும் படி நியமித்தார். ஏகாதசி அன்று ஆடு, மாடுகளுக்குகூட உணவளிப்பது இல்லை. அதுவும் விரதமிருந்து அடுத்த நாள் துவாதசி பாரணை அன்றுதான் உண்ணும் என்கின்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். முசுகுந்தன் மகள் சந்திரபாகா. சந்திரபாகாவை சோபன் என்கின்ற ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தார். அவன் உடல்நிலையில் பலவீனமானவன்.

உண்ணா நோன்பு குறித்து ஒரு நாளும் எண்ணாதவன். ஒரு முறை அவன் முசுகுந்தன் நாட்டிற்கு வந்தான். அந்த தினம் ஏகாதசி. அன்று அவனுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. ஒரு வேளை உணவு இல்லாவிட்டாலும் உயிரை விட்டுவிடும் பலவீனமான உடல்நிலையைப் பெற்றிருந்த சோபன், ஏகாதசி நாளில் நீரும் சோறும் கிடைக்காமல் தவித்து உயிர் நீத்தான். அவன் இறந்து போனாலும், ஏகாதசி நாளில் விரதம் இருந்து இறந்தவனுக்குரிய புண்ணிய உலகம் கிடைத்தது. அவன் புண்ணிய உலகம் சென்று புண்ணியத்தின் பலனாக தேவபுரம் என்கின்ற நாட்டின் அரசனானான்.

ஒரு நாள் முசுகுந்தன் ஆண்ட நாட்டிலிருந்து சோமசர்மா என்கின்ற புரோகிதர் தேவபுரம் நாட்டுக்குச் சென்று அரசனைச் சந்தித்தார். அந்த அரசனின் பூர்வீக கதையை தன்னுடைய தவ வலிமையால் தெரிந்து கொண்டு ‘‘நீ சென்ற பிறவியில் தெரியாமலேயே ஒரே ஒருநாள் இருந்த ஏகாதசி விரதத்தால் இப்படிப்பட்ட புண்ணிய பதவியை அடைந்தாய்’’ என்று சொல்ல, அன்று முதல் அவன் முறையாக ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தான்.

எல்லா மக்களும் கடைத்தேறும் படியான நிலையை தன்னுடைய நாட்டிலே ஏற்படுத்தினான். அந்த ஏகாதசி விரதம் “ரமா ஏகாதசி’’ விரதம். இன்று விரதம் இருந்து நாளை துவாதசியில் வாழை சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ளாமல் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் முதலிய காய்கறிகளை சேர்த்துக் கொண்டு, பாரனை வேண்டும். தானம் செய்ய வேண்டும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Korakar ,Siddhar ,Siddhars ,Nagapattinam… ,
× RELATED தஞ்சாவூர் அருகே காத்தையா சுவாமிகளின் 28ம் ஆண்டு குருபூஜை விழா