×

குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்திடும் வகையில் தேவையான விதிகளில்திருத்தம் செய்ய வேண்டுமென அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 2021ல் நிரப்பப்பட்டன. இதில், அதிக வயது மற்றும் அதிக தகுதியுள்ளதாக கூறி பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இதை விசாரித்த தனி நீதிபதி, அதிக தகுதியுள்ளதற்காக நீக்கம் செய்தது சரியல்ல எனக்கூறி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்த்து, ஆதிதிராவிடர் நல ஆணையர் மற்றும் திருச்சி கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு கூடுதல் பிளீடர் என்.சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘சிறப்பு விதிகளின்படி சமையலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வி என்பது தான் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது மேனிலைப்பள்ளியை முடித்தவர்கள் தகுதியானவர்கள் அல்ல. அதிக தகுதியுடையோரை நியமிப்பது என்பது எஸ்சி-எஸ்டி பிரிவிலுள்ள தகுதியானவர்களின் வாய்ப்பை பறிப்பதாகும். அனைவரையும் சமமாக பார்க்க முடியாது. பொதுப்பிரிவில் 30 வயது எனும்போது, எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு 5 வயது கூடுதல் சலுகை உள்ளது. இதை 40 வயது வயதாக அதிகரித்து நியமனம் செய்ய முடியாது’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியம். குறைந்தபட்ச கல்வித்தகுதி கொண்டவர்களின் வாய்ப்பு அதிகபட்ச கல்வித் தகுதியுடையோரால் பறிபோகிறது.

அதிக தகுதியுடையோரால் நிர்ணயிக்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொள்ள முடியவில்லை. இதை ஐகோர்ட் நிர்வாகம் கூட எதிர்கொண்டுள்ளது. சமவாய்ப்பை மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். போட்டித் தேர்வு முறைகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவே. இவர்களுக்கான பணிகளும் மிக குறைவே. அரசியலமைப்பு சட்டம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு குடிமகனின் திறனையும் பயன்படுத்த வேண்டும். நமது நாடு இன்னும் கல்வி வளர்ச்சியை அடையவில்லை. நாம் நிச்சயம் பெரும் உச்சத்தை அடைவோம் என்பதில் எந்த அச்சமும் இல்லை. ஆனால், இன்றைய யதார்த்தம் கவலைக்குரியதாக உள்ளது. சமூக, பொருளாதார மற்றும் புவியியல் காரணமாக கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டோர் பரிந்துரைக்கப்பட்ட பணிகளை செய்ய போதுமானவர்களே.
ஆரோக்கியமான பணியிட சூழல், நீதி உள்ளிட்டவை இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கிய உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிக கல்வித் தகுதியுடையோர் 4 வாரத்திற்குள் மீண்டும் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அடிப்படை பணிகள் சிறப்பு விதிகளின்படி அதிக வயதுடையோர் நியமனம் சட்டவிரோதம் என்பதால், அவர்களால் பணியை தொடர முடியாது. குரூப் 4 பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்யத் தேவையான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் பாகுபாடற்ற, சமநிலையற்ற நிலையின்றி அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதை பாதுகாக்க முடியும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

* 40 வயது வரை சமையலர் பணி தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
விடுதிகளில் சமையலர் பணிக்கு 40 வயது வரை உள்ளவர்களை நியமனம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘சமையலர் பணிக்கு 40 வயதுடையவரை நியமிக்கலாம் என்ற தனி நீதிபதியின் முடிவில் நாங்கள் உடன்படவில்லை. ஏற்கனவே 5 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், மேலும் 5 ஆண்டுகள் என்பது நீதித்துறை சீராய்வுக்கு உட்பட்டது. கூடுதலாக 5 ஆண்டு விலக்களிக்க அதிகாரம் இல்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசின் அப்பீல் மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post குரூப் 4 பணிக்கு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Govt ,Madurai ,ICourt branch ,
× RELATED காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை...