×

காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி தேவையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காவல் துறையினருக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி பெறத் தேவையில்லை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.காவல்துறையில் போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியில் உள்ள காவல் துறையினருக்கு எதிராக அந்தந்த பகுதி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட தனிநபர் வழக்கை ரத்து செய்யக் கோரி பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘இந்த விவகாரத்தில் இருவேறு விதமான முந்தைய உத்தரவுகள் உள்ளன. இதில், எதை பின்பற்றுவது என்பது சிரமமானது.

எனவே, இதில், எந்த முடிவை இறுதியானதாக எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் முடிவெடுக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றலாம்’’ என பரிந்துரைத்திருந்தார்.இதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேகர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசு பொதுப்பணியில் உள்ளவர்களை நியமனம் செய்யும் அதிகாரியால் அவர்களை நீக்கம் செய்ய முடியும். போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை, ஐஜி நிலையில் உள்ள அதிகாரிகள்தான் நியமிக்கின்றனர்.

டிஎஸ்பி உள்ளிட்ட உயரதிகாரிகள் அரசால் நியமனம் செய்யப்படுகிறார்கள். எனவே, நியமன அதிகாரியே நீக்கம் செய்ய முடியும் என்பதால் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார் மீது தனிநபர் வழக்கு தொடர துறை அதிகாரியின் முன் அனுமதி தேவையில்லை’’ என வாதிட்டனர்.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, அருள்வடிவேல்சேகர் ஆகியோர் ஆஜராகி, ‘‘குற்றவியல் நடைமுறை சட்டம் 197ன் படி தனிநபர் வழக்கு தாக்கல் செய்ய அரசின் முறையான ஒப்புதல் பெற வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு உண்டு. இதில் உயரதிகாரி மற்றும் கீழ் நிலை ஊழியர் என்பதில் பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, தனிநபர் வழக்கு தொடர்வதற்கு முன்பு முறையாக அனுமதி பெற வேண்டும்’’ என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசால் இல்லாமல் உயரதிகாரி ஒருவரால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 197 பொருந்தாது. இதை ஏற்கனவே பல உத்தரவுகள் உறுதி செய்துள்ளன. அரசால் நடவடிக்கை எடுக்கக்கூடிய பணி நிலையில் உள்ளவர்களுக்கு தான் அனுமதி பெற வேண்டும் என்பது பொருந்தும். எனவே, போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான காவல்துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி ெபறத் தேவையில்லை’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி தேவையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...