×

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் மர்மச்சாவு: போலீசார் தீவிர விசாரணை

சேலம்: மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இவர் ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார். மேலும் அதேபகுதியில் மறுவாழ்வு மையத்தையும் நடத்தி வருகிறார். இந்த மறுவாழ்வு மையம் ஆரம்பித்து 8மாதங்கள் ஆகிறது. இங்கு மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை அடுத்த நடுவனேரி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சந்திரசேகர்(29). பட்டதாரியான சந்திரசேகர் மதுவுக்கு அடிமையானார். இதனால் அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக பூபதி நடத்தி வரும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். இந்தநிலையில், நேற்றிரவு திடீரென அவர் அளவுக்கு அதிகமாக சத்தம்போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை கயிற்றால் கட்ட முயன்றுள்ளனர். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை அங்கிருந்த ஊழியர்கள் இளம்பிள்ளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சீரகாபாடியில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த மறுவாழ்வு மையத்தில் மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார், அவரை தாக்கியதில் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாரா, வேறு எதுவும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் மர்மச்சாவு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Marmachau ,Salem ,Yumapillai ,
× RELATED பட்டாசு விபத்தில் கருகிய வாலிபர் பலி