×

₹1,406 கோடியில் மீட்டெடுத்து; 43 கி.மீ. நீள அடையாறு ஆற்றை பராமரிக்கும் திட்டத்துக்கு டெண்டர்

சென்னை: 43 கிலோ மீட்டர் நீளமுள்ள, அடையாறு ஆற்றை ரூ.1406 கோடியில் மீட்டெடுத்து பராமரிக்கும் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், பணிகளை வேகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு. இந்த ஆறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் உருவாகி 42.5 கிலோ மீட்டர் நீண்டு பட்டினப்பாக்கம் மற்றும் பெசன்ட் நகர் பகுதிக்கு இடையேயான முகத்துவாரம் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. சென்னையின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிப்பு செய்கிறது. சென்னை நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர் போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.

மேலும், அடையாறு ஆற்றில் ஆண்டின் பெரும்பாலான நாட்களுக்கு நீர்வரத்து இன்றியே காணப்படும். மழைக்காலத்தின் போது, குறிப்பாக செம்பரம்பாக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகின்ற காலகட்டத்தில் தான் அடையாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மணிமங்கலத்தில் தொடங்கும் இந்த ஆற்றில், செம்பரம்பாக்கத்திலிருந்து வருகின்ற ஏரி நீர் திருமுடிவாக்கத்தில் இணைகிறது. அடையாற்றிலிருந்து செல்கின்ற நீர் பெரும்பாலும் கடலில் கலப்பதில்லை. அளவுக்கு அதிகமாகும் உபரிநீர் மட்டுமே கடலுக்குச் சென்று கொண்டிருக்கும்.

அடையாறு, ஆதனூரிலிருந்து சென்னைக்குள் நுழையும்போது தாம்பரத்திலிருந்தே கழிவுகள், குப்பை கொட்டப்பட்டு மாசடைய தொடங்கிவிடுகிறது. சாக்கடை கழிவுகள் நேரடியாக ஆற்றில் சென்று கலப்பதால், சேற்று நிலத்தில் ஓடிவரும் ஆற்று நீர், அடர்ந்த கறுப்பு நிறத்திலான கழிவுநீராக மாறுகிறது. அதை தொடர்ந்து திருநீர்மலையை கடந்து வரும்போது, மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக ஆற்றில் கொட்டப்படுகின்றன. அங்கிருந்து அனகாபுத்தூரில் தொழிற்சாலை கழிவுகள், கோட்டூர்புரத்தில் கட்டுமான கழிவுகளையும் திடக்கழிவுகளையும் நதியில் கலக்கின்றனர். இப்படியாக, அடையாறு சென்னையை அடைந்ததிலிருந்து கடலில் கலக்குவரை தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

இதனிடையே அனகாபுத்தூர் மற்றும் கோட்டூர்புரம் இடையே 24 கிலோ மீட்டர் வரையில் அடையாறு ஆற்றின் பகுதியில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துள்ளதால் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. இருப்பினும் கோட்டூர்புரத்தில் இருந்து முகத்துவாரம் பகுதி வரையும், அதேபோன்று அனகாபுத்தூருக்கு அடுத்த ஆற்றின் தொடக்க நிலை பகுதியும் சற்று சீராக உள்ளது. குறிப்பாக வண்டலூர், மண்ணிவாக்கம் மற்றும் புறநகர் போன்ற பகுதிகளில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதில்லை. எனவே இந்த பகுதியில் உயிரிழனங்கள் வாழ்வதற்கான 4 மி.கி./லிட்டருக்கு அதிகமான ஆக்சிஜன் உள்ளது. அதேபோல் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் கடலில் அலைகள் நுழைவதால் அங்கும் ஆக்சிஜன் அளவு 7 மி.கி./லிட்டர் உள்ளது. இங்கு 30 வகையான மீன்கள் மற்றும் 20 வகையான நண்டுகள் காணப்படுகிறது.

இருப்பினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மலப்பொருட்களால் ஆறு மாசுபட்டுள்ளது. குறிப்பாக சின்னமலை பகுதியில் 140 எம்பிஎன்/100ml வரை மலம் வகையை சேர்ந்த பாக்டீரியா அதிகளவில் காணப்படுகிறது. அதேபோல் நந்தனம், மாம்பலம் மற்றும் ரெட்டிக்குப்பம் கால்வாயிலிலும் இவ்வகையான பாக்டீரியா அதிகளவில் உள்ளது. இந்நிலையில் 43 கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றை ஒப்பந்த அடிப்படையில் ரூ.1406 கோடியில் மீட்டெடுத்து பராமரிக்க குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியம் டெண்டர் விட்டுள்ளது. இத்திட்டம் மூலம் முதல் 3 ஆண்டுகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் இடைமறிப்பு கருவிகள் போன்ற கட்டுமானப் பணிகளுக்காகவும் அடுத்த 15 ஆண்டுகள் பராமரிப்புக்காகவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரிய அதிகாரி கூறியதாவது:
அடையாறு ஆற்றில் கழிவுநீரை திறமையாக திசை திருப்புதல், மாசுபடுத்தும் கழிவுகளை சுத்திகரித்தல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளின் தரம், ஆற்றங்கரைகளின் தரம் மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு போன்ற 14 முக்கிய செயல்திறன் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளப்பட உள்ளனர். அனைத்து வழிகளிலும் ஆற்றில் வெளியேற்றும் கழிவுநீர் அடைக்கப்பட்டு அருகிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணாபுரம், சித்ரா நகர், கோட்டூர்புரம், பழைய ஜோதியம்மாள் நகர், சைதாப்பேட்டையில் உள்ள திடீர் நகர், நந்தம்பாக்கத்தில் உள்ள பர்மா காலனி மற்றும் அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதில் உள்ள இடைவெளிகளை சரிசெய்வதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் கூறுகையில், ‘‘சென்னையின் 100 சதவீத கழிவுநீர் கட்டமைப்பை பெறும் வரை, ஆற்றில் கழிவுநீர் வெளியேறும் தடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்ல வழிவகை செய்யப்படும். ஆற்றின் ஓரம் சுத்தம் செய்யப்பட்டு பசுமையாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் மயிலாப்பூர் பக்ஸ் சாலை, கோட்டூர்புரம் சூர்யா நகர், ஆலந்தூர் பழைய அனுசுயா மண்டபம் மற்றும் ராமாபுரம் காமு நகர் ஆகிய 5 இடங்களில் பசுமை சுற்றுச்சூழல் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. மேலும் பூங்காக்களில் நடப்படும் மரங்களை சென்னை மாநகாட்சி கண்காணிக்கும்’’ என்றார்.

The post ₹1,406 கோடியில் மீட்டெடுத்து; 43 கி.மீ. நீள அடையாறு ஆற்றை பராமரிக்கும் திட்டத்துக்கு டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Long Reach River ,Chennai ,Adhiyaru River ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...