×

புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, எளிமையான பயன்பாடு உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சேவைகள் இருக்கும் வகையில் ஸ்டார் 3.0 புதிய மென்பொருள் மெருகேற்ற வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். பத்திரப்பதிவுத் துறையில் நவீன தொழில்நுட்ப மேம்பாடு, ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் குறித்து தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இதை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அவர் கூறியதாவது: பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற ஸ்டார் திட்டம் 2000 பிப்.6ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், மென்பொருளை அதிவேகமாக இயங்க வைத்தல், கைபேசி செயலி உள்ளிட்ட சேவைகள் தொடர்பான கருத்துகளையும், அவர்தம் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு ஸ்டார் 3.0 திட்டத்திற்கு வழங்கி மெருகேற்றலாம் என்பதை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் நல்லசிவம், துணைத் தலைவர்கள் சேகர், அருள்சாமி, பதிவுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,Chennai ,Dinakaran ,
× RELATED போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம்...