×

₹ 2.23 லட்சம் கோடி செலவில் போர் விமானம், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: உள்நாட்டிலேயே ₹2.23 லட்சம் கோடி செலவில் விமானம் தாங்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் ராணுவ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்டை நாடான சீன எல்லையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு முயற்சிகளில் இறங்கி இருப்பதை தடுக்க, நாட்டின் போர் திறனை அதிகரிக்கவும், ராணுவ பலத்தை வலுப்படுத்தவும் பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட கொள்முதல், உற்பத்தி ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ₹40,000 கோடி செலவில் மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பல், எச்ஏஎல் தயாரிப்பில் ₹55,000 கோடி செலவில் கூடுதலாக 97 தேஜஸ் மார்க்-1ஏ போர் விமானங்கள் மற்றும் சியாச்சின், கிழக்கு லடாக் பகுதிகளின் பனிமலை உச்சியில் பாதுகாப்பு பணிக்காக ₹45,000 கோடி செலவில் ராணுவம், விமானப்படைக்காக 156 இலகு ரக பிரசாண்ட் ஹெலிகாப்டர்கள் ₹2.23 லட்சம் கோடி செலவில் தயாரிக்கும் 3 புதிய மெகா ராணுவ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தவிர, டி-90 டேங்குகளில் பொருத்தப்படும் தானியங்கி இலக்கு காணும் கருவி, டிஜிட்டல் பாசால்டிக் கணினி, கப்பற்படைக்கான குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, டைப்-2 மற்றும் டைப்-3 எதிர்ப்பு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், விமானப்படையை மேம்படுத்த அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திடம் இருந்து சுகோய்-30 போர் விமானங்களை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த ₹2.23 லட்சம் கோடி பட்ஜெட் திட்டத்தில் 98 சதவீத தளவாடங்கள், கருவிகள் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளுக்கான தேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதும் ஒப்பந்தபுள்ளி கோருவது தொடர்பான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ₹ 2.23 லட்சம் கோடி செலவில் போர் விமானம், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,NEW DELHI ,EU Government ,Dinakaran ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...