×

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து 3ம் தேதி புயல் உருவாகிறது: 5 நாட்கள் மழை நீடிக்கும்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 29ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது படிப்படியாக வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அத்துடன், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆவடியில் 190 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கொளத்தூர், திருவிக நகர், பொன்னேரி, 150 மிமீ, அம்பத்தூர் 140 மிமீ, தலைஞாயிறு, சோழவரம், ஆலந்தூர் 130 மிமீ, அடையாறு, அண்ணா பல்கலைக் கழகம், மதுரவாயல், செங்குன்றம், புழல், கோடம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, வளசரவாக்கம், பெரம்பூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை 110 மிமீ, தேனாம்பேட்டை, பெருங்குடி, மீனம்பாக்கம், வானகரம் 100 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு நேற்று வந்தது. தற்போது அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், பின்னர், மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு சென்று 3ம் தேதி புயலாக வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதேநிலை 5ம் தேதி வரை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். எனவே, கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் செல்ல தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வெள்ள நீர் வெளியேற வடிகால் வசதிகளை மேற்கொள்ளவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* அதிகபட்சமாக ஆவடியில் 190 மிமீ மழை பெய்துள்ளது.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கொளத்தூர், திருவிக நகர், பொன்னேரி, 150 மிமீ, அம்பத்தூர் 140 மிமீ, தலைஞாயிறு, சோழவரம், ஆலந்தூர் 130 மிமீ மழை பெய்துள்ளது.
* கடலோர மாவட்டங்களில் 5ம் தேதி வரை மழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

The post காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து 3ம் தேதி புயல் உருவாகிறது: 5 நாட்கள் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bay of Bengal ,
× RELATED 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை...