×

செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை அலட்சியத்தால் மான், மயில் வேட்டை சம்பவங்கள் அதிகரிப்பு: விலங்குகள் குறித்து கணக்கெடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டமாக இருந்தபோதிலும், விவசாயம்தான் மாவட்டத்தில் உள்ள அதிகப்படியான விவசாயிகளின் தொழிலாக இருந்து வருகிகிறது. மாவட்டம், முழுவதும் செய்யப்படும் முதன்மைப் பயிராக நெல் பயிர் உள்ளது. இதில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்கள் மாவட்டத்தின் முன்னனி நெல் உற்பத்தி செய்யும் இடங்களாக பார்க்கப்படுகிறது. சில, இடங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. மேலும், ஒரு சில குறைவான இடங்களில் வேர்கடலை மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது.

வருவாய், தரக்கூடிய பயிர் வகைகளான வேர்கடலை, உளுந்து, காராமணி, கொள்ளு மற்றும் எள்ளு போன்றவை செய்யூர் மற்றும் மதுராாந்தகம் தாலுகா முழுவதும் ஆண்டுதோறும் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு, வண்டலூர், திருப்போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடுகள், மலை சார்ந்த வனப்பகுதிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்த, காடுகள் மற்றும் மலை சார்ந்த வனப்பகுதிகளில் அரிய வகை புள்ளி மான்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகள், நரிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மாவட்டம், முழுவதும் வனப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தொட்டிகள் அமைக்காததாலும், சில இடங்களில் உள்ள தொட்டிகளில் தண்ணீரும் இல்லாமல் போனதாலும் அவை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

மேலும் தண்ணீருக்காக செல்லும்போது, தவறி கிணறுகளில் விழுந்து பலியாவதும், வனப் பகுதிகளைச் சார்ந்துள்ள கிராமப் புறங்களில் உட்புகும்போது தெருநாய்கள் கடித்து இறப்பதும், சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறப்பதும் அதிகரித்து வருகின்றன. எப்போதாவது, தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவதால் அதனைத் தேடி வந்து மான்கள் குடிப்பதற்குள் வெப்பத்தில் தண்ணீர் வற்றி, தொட்டி வறண்டு போவதால், மான்கள் ஏமாற்றம் அடைந்து வனப் பகுதிகளை விட்டு வெளியேறும் நிலைக்கே தள்ளப்படுகின்றன. குறிப்பாக, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கடித்து மயில்களும், வாகனங்களில் அடிபட்டு அதிக எண்ணிக்கையிலான மான்களும் இறந்துள்ளது.

இதுகுறித்து, விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாததுபோல், வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுகின்றனர். மேலும், வனத்துறையினரின் அலட்சியத்தால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வனப்பகுதிகளில் மான்கள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட சில காட்டு பகுதிகளில் கறிக்காக விஷம் வைத்து மயில்களை கொன்று உணவுக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கடந்த, நவம்பர் 16ம் தேதி கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் மானை நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடி, பட்டப் பகலில் ஒரு கோணி பையில் கட்டி கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்தில் விற்பனை செய்ய கொண்டு வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து நாட்டுத் துப்பாக்கி, மான் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். எனவே, வனத்துறையினர் அலட்சிய போக்கை கைவிட்டு வனவிலங்குகளுக்கு தேவையான பழவகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், காட்டுப் பகுதியில் தண்ணீர் வற்றாமல் இருக்க கொட்டகை அமைத்து தொட்டிகள் கட்டி தண்ணீர் நிரப்ப வேண்டும். விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் விலங்கியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மான் கறி ரூ.6 ஆயிரம் வரை விற்பனை
செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதி
களில் மான்களை வேட்டையாடி மாமல்லபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு ஒரு கிலோ ரூ.1500 முதல் ரூ.6 ஆயிரம் வரை மான் கறி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

போனை எடுக்காத வனத்துறையினர்
வாகனங்களில் அடிபட்டு மான்கள் இறப்பது, நாய்கள் கடித்து மான்கள் இறப்பது மற்றும் வேட்டையாடும் சம்பவங்கள் குறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்க பொதுமக்கள் போன் செய்தால் அவர்கள் போனை எடுப்பதில்லை. அப்படி, போன் எடுத்தாலும் நான் செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் உள்ளேன் எனக்கூறி போனை கட் செய்து விடுகின்றனர்.

காதலர்களின் கூடாரமான காட்டுப் பகுதிகள்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதிகளில் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ரோந்து செல்லாததால் பகல் நேரங்களில் காதலர்களின் கூடாரமாகவும், இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் தொட்டிகள் இல்லை
மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான காட்டுப் பகுதியில் முறையாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படாமல் உள்ளன. சில இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளும் சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது.இதனால், வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறும் அவநிலை தொடர்கிறது.

காட்டுப்பன்றி ரூ.400க்கு விற்பனை
இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் மீன்பிடி வலைகள் விரித்து காட்டுப்பன்றிகள் பிடிக்கப்படுகிறது. சில, இடங்களில் காட்டுப்பன்றிகள் மின்சாரம் வைத்து கொள்ளப்படுகிறது. பின்னர், தெரிந்தவர்களுக்கு மட்டும் கிலோ ரூ.400க்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

Tags : Chengalpattu district ,Mamallapuram ,Tamil Nadu ,Trincomalee ,Maduranthagam ,Jaipur ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...