திருப்போரூர்: வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக இன்று முதல் 3ம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் எச்சரிக்கையுடன் புயல், மழையின் காரணமாக மக்கள் பாதிப்பின்றி இருக்கும் வகையில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பெரிய ஏரிகள் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் ஒன்றியத்தில் தையூர், கொண்டங்கி, சிறுதாவூர், ஆமூர், செம்பாக்கம், மானாம்பதி, தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் அந்தந்த பகுதியிலேயே 24 மணி நேரமும் தங்கி இருக்க வேண்டும். புயல் மற்றும் மழை அதனால் ஏற்படும் பாதிப்பினையும் சமாளிக்க தேவையான பொக்லைன் இயந்திரங்கள், மரங்களை அறுக்கும் கருவிகள், ஜெனரேட்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, நெம்மேலி, பட்டிபுலம், தேவனேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் கோவளத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மீட்பு படகு, உயிர் காக்கும் உடைகள், படகுகளை மீட்கள் நீளமான கயிறுகள் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் தங்கி உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு, அவர்கள் சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள். இதனிடையே வருகிற 4ம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கு செல்போனில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில், வருவாய்த்துறையை சேர்ந்த குழுவினரும், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, சசிகலா ஆகியோர் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த குழுவினரும் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
The post புயல் சேதங்களை தவிர்க்க தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழு appeared first on Dinakaran.

