×

இந்திய கலைஞர்களை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

செங்கல் மற்றும் சிமென்ட் கொண்டு வீட்டினை அமைத்தாலும் அதில் பல உணர்வுகள் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை தங்களின் இன்டீரியர் வடிவமைப்புகள் மூலம் செய்து வருகிறார்கள் சென்னையை சேர்ந்த தோழிகளான ஸ்ரீபிரியா மற்றும் ரம்பா. இவர்கள் பெரும்பாலும் ஆடம்பர இன்டீரியர் வடிவமைப்புகளைதான் செய்து வருகிறார்கள்.

‘‘2018ல்தான் நானும் ரம்பாவும் எங்களின் ‘நியோன் ஆட்டிக்’ நிறுவனத்தை ஆரம்பித்தோம்’’ என்று பேசத் துவங்கினார் ஸ்ரீபிரியா. ‘‘நானும் ரம்பாவும் ஆர்கிடெக்சர் படிப்பினை ஒரே கல்லூரியில் படிச்சோம். அப்போது தான் எங்களின் நட்பு உருவானது. அதன் பிறகு நான் மேற்படிப்பிற்காக ஹாங்காங் சென்றுவிட்டேன். ரம்பா அமெரிக்கா போயிட்டாங்க. நான் அங்கு எட்டு வருஷம் ஒரு நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்தேன். நாங்க இருவரும் வேறு வேறு நாட்டில் இருந்தாலும் எங்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

அதனால் இந்தியா வர முடிவு செய்த பிறகு, எங்களின் அனுபவங்களைக் கொண்டு ஒரு டிசைனிங் ஸ்டுடியோ அமைக்க முடிவு செய்தோம். அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை துவங்கினோம். நாங்க இந்த நிறுவனம் அமைக்க முக்கிய காரணம், ஒரு வீட்டின் உட்புற அலங்காரம் செய்யும் போது அதை அர்த்தமுள்ளதா அமைக்க விரும்பினோம். காரணம், ஒவ்வொரு வீடும் பல உணர்வுகள் கொண்டு இருக்கும்.

அதை நாங்க எங்களின் டிசைன் மூலம் அமைத்து தர முடிவு செய்தோம். பெரும்பாலும் எங்களின் டிசைன் எல்லாம் லக்சுரி டிசைன்களாகத்தான் இருக்கும். காரணம், ஒரு பொருளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் போது அது தலைமுறை தலைமுறையாக அந்த வீட்டை அழகுபடுத்த வேண்டும் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். அதனால் தான் நாங்க லக்சுரி உள்ளலங்காரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். நாங்க வீட்டின் உள் அலங்காரம் மட்டுமில்லாமல், கட்டிடக்கலை மற்றும் வீட்டிற்கான பிரத்யேக பொருட்களையும் டிசைன் செய்து தருகிறோம்.

சென்னைக்கு வந்த போது நாங்க டிசைனிங் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பிப்போம்னு முதலில் நினைக்கல. ஆனால் நாங்க அடுத்து என்ன செய்யலாம்னு யோசித்த போது தான் இருவரும் இணைந்து தனியாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்தோம். ரம்பா பொறுத்தவரை சின்னச் சின்ன விஷயத்தையும் அழகா நுணுக்கமா டிசைன் செய்வா. நான் அவ மனதில் என்ன நினைக்கிறாளோ அதை அப்படியே எக்சிக்யூட் செய்வேன். இந்த இரண்டும் தான் இந்த துறைக்கு மிகவும் அவசியம். அது எங்களிடம் இருக்கும் போது நாங்க ஏன் வேறு ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும்’’ என்றவர் லக்சுரி இன்டீரியர் பற்றி குறிப்பிட்டார்.

‘‘செங்கல் மற்றும் சிமென்ட் கொண்டு ஒரு கட்டிடம் எழுப்பும் போது பார்க்க வெறுமையாகத்தான் இருக்கும். அதில் வசிக்க இருப்பவர் அதன் உள்ளமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன் மனதில் படம் பிடித்து வைத்திருப்பார். அவர்கள் மனதில் உள்ளதை நாங்க நினைவாக தருகிறோம். இன்டீரியர் பொறுத்தவரை ஒரு பொருளை ஆயிரத்திற்கும் வடிவமைக்கலாம். அதையே லட்ச ரூபாய்க்கும் கொடுக்கலாம். பொருள் என்பது ஒன்று தான் ஆனால் அது முழுமையான வடிவம் பெறும் போது அதன் தன்மை மற்றும் தரமே மாறுபடும்.

உதாரணத்திற்கு, வீட்டின் வரவேற்பு அறையில் உள்ள காஃபி டேபிள். அந்த ேடபிளின் வேலையே வரவேற்பு அறையினை அழகுபடுத்துவது மற்றும் விருந்தாளிகள் வந்தால் டீ அல்லது ஸ்னாக்ஸ் வைக்க பயன்படுத்தப்படும். இந்த டேபிள் சில ஆயிரம் ரூபாயில் கிடைக்கும். அது சாதாரண மரத்தில் பாலிஷ் செய்யப்பட்டு பளபளவென்று இருந்தாலும் ஒன்றிரண்டு வருஷத்தில் அதன் மேல்பகுதி உறிய ஆரம்பிக்கும். ஆனால் அதே மேசையை அமெரிக்கன் ஓக் மரத்தில் செய்யும் போது, அதன் தன்மையே மாறுபடும்.

அவ்வப்போது பாலிஷ் செய்து வைத்தால் தலைமுறைக்கும் பொலிவு மாறாமல் புதிது போல இருக்கும். என்ன இதன் செலவு அதிகம்தான். ஆனால் வருஷத்திற்கு ஒரு முறை மாற்றுவதற்கும் ஆண்டாண்டு காலம் நீடித்து இருப்பதற்கும் மதிப்பு அதிகம். இது தான் லக்சுரி இன்டீரியர். மேலும் எங்களின் வடிவமைப்பு ஒவ்வொன்றும் மாறுபட்டு இருக்கும். காரணம், நாங்க வீட்டின் அளவினைப் பார்த்து அதற்கு ஏற்ப எந்த பொருள் எங்கு வைத்தால் நன்றாக இருக்கும். அதை எப்படி அமைக்கலாம் என்று ஒவ்வொரு மூலையும் பார்த்து பார்த்து வேலை செய்வோம்’’ என்றவர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் யுசர் பிரண்ட்லி முறையில் இருப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

‘‘ஒரு வீட்டைக் கட்டும் போது அதில் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டியது அந்த வீட்டிற்கான மின்சார அமைப்பு. சிலர் ஃபிரிட்ஜினை சமையல் அறையில் வைக்க விரும்புவார்கள். ஒரு சிலர் அதற்கென தனிப்பட்ட இடம் ஒதுக்கி இருப்பார்கள். ஒரு வீட்டை பார்க்கும் போதே எந்த பொருள் எங்கு வைத்தால் சரியாக இருக்கும் என்று வீட்டினருடன் பேசி முடிவு செய்து, அதற்கு ஏற்ப டிசைன் செய்வோம். வீட்டைப் பொறுத்தவரை மின்சார அமைப்பு மிகவும் யுசர் பிரண்ட்லியாக இருக்கணும். அதனால் தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஸ்விட்ச் சற்றும் பிளக்பாய்ன்ட்களை அமைத்து தருகிறோம்.

அதற்கு ஒரு முக்கிய காரணம்… ஒருவர் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஒரு பொருளை வீட்டிற்கு வாங்க நினைத்தால் அதற்கான தனிப்பட்ட இடத்தினை தேட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. அதேபோல் படுக்கை அறையில் விளக்கிற்காக பயன்படுத்தப்படும் ஸ்விட்ச் படுக்கை பக்கத்தில் இருப்பது அவசியம். சிலர் படுக்கும் போது செல்போன் பார்ப்பது அல்லது புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர்.

அந்த சமயத்தில் மீண்டும் படுக்கையில் இருந்து எழுந்து வந்து விளக்கினை அணைக்க வேண்டும். அதுவே படுக்கை அருகில் அதற்கான ஸ்விட்ச் இருந்தால் வசதி தானே. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாக நாங்க பின்பற்றுவது, வீட்டில் பொருத்தப்படும் விளக்குகள். கண்களை கூசாமல், நன்கு வெளிச்சம் அளிக்கக்கூடியதாக பொருத்துகிறோம். சோபா, கவுச், சுவர் அலங்காரம், நிறங்கள் அனைத்தும் பார்த்து பார்த்து தான் அழகுபடுத்துகிறோம். உணர்வுகள் தாங்கி இருப்பது தான் வீடு.

அதை அருங்காட்சிப் பொருளாக மாற்றக் கூடாது என்பதில் நானும் ரம்பாவும் மிகவும் உறுதியாக இருக்கிறோம். மேலும் ஒருவர் தன்னுடைய வீட்டை எதிர்காலத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான இடம் அந்த வீட்டில் இருக்க வேண்டும்’’ என்றவர் ‘ஆர்ட் டிசைன் அண்ட் பியாண்ட்’ கண்காட்சி குறித்து விவரித்தார்.
‘‘இந்தியா முழுதும் தரமான முறையில் இன்டீரியர் செய்பவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் இந்த கண்காட்சியின் முக்கிய ேநாக்கம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லாமல் எங்களைப் போல் கட்டிடக் கலையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் இந்தியாவில் உள்ள பல்வேறு டிசைனர்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒரு வீட்டின் உள் அலங்காரம் என்றால் சுவற்றில் பெயின்ட் அடிப்பது மற்றும் வார்ட்ரோப் அமைப்பது மட்டுமில்லை. ஒரு அறையில் என்னவிதமான மரச்சாமான்களை வைக்கலாம்.

சமையல் அறையில் எவ்வாறு அலமாரி டிசைன் செய்யலாம். பால்கனியை கூட ரசனையாக மாற்றி அமைக்க முடியும். இதில் ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்களை இந்த கண்காட்சி மூலம் ஒன்றிணைத்தோம். அதே சமயம் இவை அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வடிவமைக்கப்பட்டாலும் அவை உலகத்தரம் வாய்ந்தவை. இந்தக் கண்காட்சி மூலம் உலகளவில் அதனை கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் எங்க இருவரின் நோக்கம். இது முதல் கண்காட்சி என்றாலும் இந்தப் பயணம்
தொடரும்’’ என்றார் ஸ்ரீபிரியா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post இந்திய கலைஞர்களை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான் என் டார்கெட்!