×

நாடு முழுவதும் 49 இடங்களில் நடத்த திட்டம் கர்ப்ப காலத்தில் இதயநோய் பராமரிப்பு குறித்து ஆய்வு

சென்னை: இதய நோய் பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது குறித்து நெறிமுறையை உருவாக்க சென்னை மருத்துவ கல்லூரி இதயவியல் துறை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் விரைவில் நாடு தழுவிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள 49 இடங்களில் இந்த ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். கர்ப்ப காலத்தில் இதய நோய் பராமரிப்பு நெறிமுறையை உருவாக்குவது, கர்ப்ப காலங்களில் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு மேம்படுத்துவது, வழக்கமான கவனிப்புடன் ஒப்பிடும்போது அதன் செயல்திறனை மதிப்பீடு செய்வது ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

ஆய்வில் பங்கேற்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இதய தாள நோய், இதய ரத்த ஓட்டத்தடை நோய், பெருநாடி நோய்கள் மற்றும் நுரையீரல் வாஸ்குலர் நோய்கள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை உடன் 4 ஆண்டுகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த ஆய்வு தேசிய ஒருங்கிணைப்பு மையமான மகளிர் மருத்துவமனைகளுடன் இணைந்து எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவிடன் இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது என ஆய்வாளர் டாக்டர் ஜஸ்டின் பால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மகப்பேறு இறப்புக்கான நேரடி காரணங்களான தொற்று மற்றும் ரத்தப்போக்கு ஆகியவை கவனிக்கப்படுகிறது ஆனால் இதய நோய்கள் போன்ற மறைமுக காரணங்களும் உள்ளது. மாநிலத்தில் மகப்பேறு இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆனால், மகப்பேறு இறப்புக்கான இதய பங்களிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை குறைக்க, இதய நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் பராமரிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம். இதற்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் ஆபத்து எப்படி உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆய்வு மூலம் அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும். மேலும் இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிப் பெண்களை நிர்வகிப்பதற்கான ஒரு நெறிமுறை எங்களிடம் இருக்கிறது என்றார்.

The post நாடு முழுவதும் 49 இடங்களில் நடத்த திட்டம் கர்ப்ப காலத்தில் இதயநோய் பராமரிப்பு குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Medical College ,
× RELATED சென்னை மருத்துவ கல்லூரி மைதானத்தில்...