×

பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி: புதுவையில் புதிய அமைச்சர் யார்? சுவாமியிடம் உத்தரவு வாங்கிய முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை முதல்வர் ரங்க்சாமி நீக்கியதை தொடர்ந்து, புதிய அமைச்சர் யார் என்ற பரபரப்பு எழுந்தது. அமைச்சர் பதவி கேட்டு காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் தொடர்ந்து ரங்கசாமியை சந்தித்து நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என தெரியாமல் முதல்வர் ரங்கசாமி தவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரபிரியங்கா, கோரிமேட்டில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்று சந்தித்து, ‘என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு மீண்டும், வாய்ப்பு தாருங்கள்’ என கூறி கதறி அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமியார் கோயிலில் நேற்று 104வது குருபூஜை திருவிழா நடந்தது. இதில் காலை 10:45 மணி அளவில் கோயிலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபட சென்றார். பின்னர் அவர் கோயில் முன்பு சிறிது நேரம் அமர்ந்து தியான நிலையில் இருந்தார். அதன் பின் கோயிலை சுற்றி வந்து வழிபட்டார். இதையடுத்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து புறப்பட்டு சென்றார். அதனைதொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, நேற்று மாலை 6 மணியளவில் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்றார். 15 நிமிடம் அப்பா பைத்தியம் சாமியை மனமுருகி வேண்டிக் கொண்டு புதுச்சேரிக்கு திரும்பினார்.

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக முதல்வர் ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று நிதிநிலை அறிக்கையை வைத்து வழிபட்டார். அதனை தொடர்ந்து தற்போதுதான் பொள்ளாச்சி மற்றும் சேலத்துக்கு சென்றுள்ளார். வேட்பாளர் தேர்வு, முக்கிய விஷயம் என்றாலும் சேலம் கோயிலுக்கு சென்று உத்தரவை பெறுவார். அந்த வகையில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவி டிஸ்மிஸ் மற்றும் புதிய அமைச்சர் விவகாரம், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து சுவாமியுடன் அருளாசி பெற சென்றுள்ளார். புதிய அமைச்சர் யாரை நியமிப்பது என்பது குறித்து சுவாமியின் உத்தரவுக்காக சென்றுள்ளார். எனவே விரைவில் புதிய அமைச்சர் யார் என்பது தெரியவரும்,’ என்றனர்.

The post பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி: புதுவையில் புதிய அமைச்சர் யார்? சுவாமியிடம் உத்தரவு வாங்கிய முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Swami ,Puducherry ,Transport Minister ,Chandra Priyanka ,Chief Minister ,Rangsami ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...