×

செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சியில் மதுராந்தகம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணிதா சம்பத் என்பவரின் வீடு உள்ளது. இவரது கணவர் சம்பத்குமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர். இவர்களின் மகன் கோபியும் செங்கல்பட்டை சேர்ந்த யாசர் என்பவரும் திருக்கழுக்குன்றம் சாலையில் ரஹமத் பர்னிச்சர் என்ற பெயரில் தனியார் உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 6 மாதங்களாக கோபிக்கும் யாசருக்கும் இடையே தொழில் தகராறு இருந்து வந்துள்ளது. இத்தொழில் சம்பந்தமாக, முன்னாள் எம்எல்ஏவின் மகன் கோபிக்கு யாசர் ரூ.20 லட்சம் பணம் தரவேண்டியிருந்தது.

இப்பணத்தை கோபி பலமுறை கேட்டும் யாசர் தரவில்லை. இதனால் அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து, ரூ.20 லட்சம் மதிப்பில் வங்கி காசோலையை கோபி குடும்பத்தினர் பெற்று கொண்டனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் யாசர் புகார் அளித்தார். இப்புகாரில், என்னை முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணிதா சம்பத் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி, என்னிடம் இருந்து ரூ.20 லட்சத்துக்கான காசோலையை பெற்றுள்ளனர். இப்பணத்தை உடனடியாக தராவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர் என யாசர் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின்பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை 6 எஸ்ஐ மற்றும் 25 போலீசாருடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு யாரும் இல்லாமல், வீடு திறந்த நிலையில் கிடந்தது. வீட்டுக்குள் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அங்கு யாசர் வந்து சென்றாரா என்பதை வீடு மற்றும் அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், தலைமறைவான கணிதா சம்பத் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Chengalpattu ,Geetha Sampath ,Madurandakam ,Alappakkam panchayat ,AIADMK ,MLA ,Dinakaran ,
× RELATED ₹20 லட்சம் முறைகேடு அதிமுக முன்னாள்...