×

என் வாடிக்கையாளர்களே என் மாடல்கள்!

நன்றி குங்குமம் தோழி

இப்போதெல்லாம் பெண்களை மேக்கப் இல்லாமல் பார்க்க முடிவதில்லை என சொல்லலாம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் மேக்கப் போடாமல் தங்களின் இயற்கையான அழகுடன் வலம் வருகின்றனர். ஆனால் அவர்களுமே குறைந்தபட்சம் கண்களுக்கு மை அல்லது ஐலைனர் மற்றும் உதட்டிற்கு லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துபவர்களின் பிரதான மேக்கப் பொருள் கண் மை என்பதால், அவர்கள் அதற்காக பலவித பிரத்யேக பிராண்டுகளை தேடித் தேடி உபயோகப்படுத்துவார்கள்.

ெபாதுவாக கண் மை, ஐலைனர் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால் தற்போது, நாம் அணியும் உடைகளின் வண்ணத்திற்கு ஏற்ப கண் மை மற்றும் ஐலைனர்களை சில அழகு சாதன நிறுவனங்கள் விற்கின்றன. அவற்றில் ஒரு சிலரே தனித்து காணப்படும் சில பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கண் மை மற்றும் ஐ லைனர்களை முதன்மையாகக்கொண்டு நோவாவீ என்னும் பெயரில் ஆரம்பித்த நிறுவனம் தற்போது 40 வகையான மேக்கப் பொருட்களை தயாரித்து, பல டாப் மேக்கப் நிறுவனங்களுக்கு மத்தியில் தனது நிறுவனத்தின் பெயரினை நிலைநாட்டியுள்ளார், சென்னையை சேர்ந்த நேஹா சந்திரசேகர்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். எனக்கு மேக்கப் செய்து கொள்ள ரொம்ப பிடிக்கும். ஆனால் என்னுடைய அதிகபட்ச மேக்கப் என்றால் கண்களை அழகுபடுத்தும் கண் மையும், ஐ லைனரும்தான். பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகா காட்டுவதில் தனி ஆர்வம் உண்டு. அதனாலேயே நிறைய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவாங்க. ஒரு சிலர் தங்களின் சருமத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேக்கப் பொருட்களை பயன்படுத்துவாங்க.

நானுமே ஆரம்பத்தில் அப்படித்தான் பயன்படுத்தினேன். சில கண்மைகளை உபயோகிக்கும் போது எரிச்சல் ஏற்படும். கண்ணீர் வந்துட்டே இருக்கும். சில பவுடர் முகப்பருக்களை அதிகமாக்கும். இது போல நிறைய பிரச்னைகளை நான் சந்திச்சேன். அந்த சமயத்தில் முடிவு செய்ததுதான் நோவாவீ (Novavii).

ஆரம்பத்தில் நாங்க கண்களுக்கான மேக்கப் பொருட்கள், கண் மை, ஐ லைனர் மற்றும் மேக்கப் ரிமூவர் இந்த மூன்று பொருட்கள் கொண்டுதான் ஆரம்பித்தோம். அது வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போக, அவர்களின் கோரிக்கைப்படி ஃபவுண்டேஷன், ஐ ஷாடோ, ப்ளஷ், பிரான்சர், லிப் பாம் போன்றவற்றை தயாரிக்க துவங்கினோம். ஐ லைனர் பொதுவாக கருப்பு மற்றும் கோல்டன் நிறத்தில்தான் இருக்கும். நாம் ஏன் அதில் மற்ற நிறங்களை கொண்டு வரக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. மாறுபட்ட வண்ணங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம். மயில் பச்சை நிறத்தின் ஐ லைனரை அறிமுகப்படுத்தினோம்’’ என்றவர் மேக்கப் அவசியமா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

‘‘நான் நானாக இருக்க வேண்டும். மேக்கப் கொண்டு என்னை மாற்றி அமைக்க விரும்பவில்லைன்னு சிலர் சொல்வாங்க. அதற்காக மேக்கப் போடவே கூடாது என்றில்லை. நம்முடைய ேதாற்றத்தை ஏதேனும் ஒரு இடத்தில் வேறுபடுத்தி காட்டத்தான் மேக்கப் பயன்படுத்துகிறோம். சிலர் கண்கள், உதடு, தலைமுடி போன்றவற்றை மேக்கப் கொண்டு தனித்து காட்டுவார்கள். அது பார்க்க அழகாக இருக்கும். அதே சமயத்தில் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் நாம் அனைவரும் பார்ப்பது, மேக்கப்பின் நீடிப்பு தன்மை, முகத்தில் போட்டால் அழியாமல் இருக்கிறதா என்று தான் பார்க்கிறோம். ஆனால் அவை சில சமயம் ஒரு சிலருக்கு முகத்தில் பரு, சரும பாதிப்பு போன்ற பிரச்னையினை ஏற்படுத்தும். அதனால் எங்களின் மேக்கப் பொருட்கள் எவ்வளவு நேரம் முகத்தில் தங்குகிறது மற்றும் அதனால் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்ற சோதித்து பார்ப்போம். அதன் பிறகு தான் அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ேவாம்.

பலர் என்னிடம் தங்களுக்கு மேக்கப் போட்டால் சரியாக இருக்குமா? மற்றவர்கள் இந்த மேக்கப் பார்த்தால் என்ன நினைப்பாங்க என பலவிதமா கேள்விகளுடன் என்னை அணுகி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, மேக்கப் போடுவதற்கு வயது வரம்பு கிடையாது. என்னுடைய அதிகமான வாடிக்கையாளர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான். ஒரு தனி நபரின் பர்சனாலிட்டியை பிரதிபலிக்கும் ஒரு விஷயமாகத்தான் மேக்கப்பினை நான் பார்க்கிறேன். சிலருக்கு மேக்கப் போடுவதால் தன்னம்பிக்கை ஏற்படுவதாக கூறுவார்கள்’’ என்ற நேஹா மற்ற பிராண்டுகளுக்கும் தங்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கினார்.

‘‘பெரும்பாலான மேக்கப் விளம்பரங்களில் வரும் மாடல்கள் ஆண்-பெண் யாராக இருந்தாலும், அவர்கள் பிரைட் சருமம் கொண்டவர்களாகத்தான் இருப்பாங்க. அந்த மேக்கப் பொருட்கள் மாநிறமாக உள்ளவர்களுக்கும், சற்று நிறம் அதிகமாக உள்ளவர்களுக்கும் நன்றாக பொருந்தும். கருமையான தோற்றம் மற்றும் டஸ்கி சருமம் கொண்டவர்களுக்கும் நன்றாக இருக்காது. அப்படியே பயன்படுத்தினாலும் அசவுகரியமாக உணர்வார்கள். இவர்களுக்காகவே சென்னையின் காலநிலைக்கு ஏற்பவும், ஒருவரின் சருமத்தின் தன்மையினை கருத்தில் கொண்டுதான் நாங்க எங்க பொருட்களை தயாரித்து இருக்கிறோம். என் வாடிக்கையாளர்கள்தான் என் மாடல்கள்.

என்னுடைய சொந்த முயற்சியால்தான் நான் இந்த நிறுவனத்தை துவங்கினேன். இதனை ஆரம்பிக்கும் முன் நான் வேறு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அதில் கிடைத்த சம்பளத்தை மூலதனமாக வைத்துதான் இந்த நிறுவனத்தை துவங்கினேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. மேக்கப் என்றாலே உலகம் முழுதும் சில நிறுவனங்கள் ஆட்சி செய்து வருகிறது. அப்படி இருக்கும் போது என்னுடைய பிராண்டினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.மக்கள் அதனை பயன்படுத்தி அதன் தரத்தினை புரிந்து கொண்ட பிறகு எங்களின் பொருட்களை விரும்ப ஆரம்பிச்சாங்க. இப்போது சென்னை மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்’’ என்றவர் தீபாவளி முன்னிட்டு புதிய ஷேட் லிப்ஸ்டிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post என் வாடிக்கையாளர்களே என் மாடல்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான் என் டார்கெட்!