×

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்சேபனைக்குரிய நிலங்கள் தவிர மற்ற நிலங்களில் வசிப்பவருக்கு தற்காலிக வரிவசூல் செய்ய வேண்டும்: கவுன்சிலர்கள் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா, ஆன்மீக தலைவர் பங்காரு அடிகளார் மறைவிற்கு உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் பேசுகையில், ‘‘எனது வார்டில் பரமேஸ்வரன் நகர் என்ற பகுதியில் 90 ஆண்டுகளாக மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கழிவுநீர் இணைப்பு வசதிகள் கொடுக்க முடியவில்லை.

மின் வசதி குடிநீர் வசதி பெற முடியவில்லை. மேலும் தற்காலிக வரி விதிப்புபடி அவர்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு வழங்க வேண்டும். தற்போது வருவாய் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கினால் தான் தற்காலிக வரி விதிக்க முடியும் என கூறப்படுகிறது. அதை நீக்க வேண்டும்” என்றார். மேயர் பிரியா: ‘‘அரசு நிலம், கிராம நத்தம், அனாதீன நிலம் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு தற்காலிக வரி விதிக்க வருவாய் துறை சான்றிதழ் இருந்தால் வரி விதிக்கப்படும்” என்றார். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்களும், மண்டல குழு தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஸ்வநாதன் (கல்வி குழு தலைவர்): கடந்த ஆட்சியில் ரெட்பாம் என்ற முறை இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளே தற்காலிக வரி விதிப்பு முறையை வழங்கினர். இதனால் பொதுமக்கள் எளிதாக கழிவுநீர் இணைப்புகள் பெற முடிந்தது. மீண்டும் ரெட்பாம் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.தனசேகரன் (நிலைக்குழு தலைவர்): வருவாய் துறையிடம் சான்றிதழ் பெறுவது என்பது எளிதாக நடக்கும் காரியம் அல்ல. வருவாய் துறை சான்றிதழ் பெற வருடக்கணக்கில் ஆகும். கடமைக்காக இதை செய்யக்கூடாது, மக்களுக்கு பயனுள்ள வகையில் நாம் ரெட்பாம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அதுதான் இந்த மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

வி.வி.ராஜன் (மண்டல குழு தலைவர்): மாநகராட்சி ஆணையர் பேரில் தானபத்திரம் கொடுக்கச் சொன்னாலே வருவாய் துறையினர் தான பத்திரத்தை மாற்றிக் கொடுப்பதில்லை. எனது வார்டில் 74 தானபத்திரங்கள் இதுவரை மாற்றி மாற்றி கொடுக்க என்ஓசி கொடுக்கவில்லை. இதுவே சிறந்த உதாரணமாகும். மேயர்: உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து தீர்மானம் வரும்போது இது குறித்து விவாதிக்கலாம். அதிகாரிகளுடன் பேசி இதற்கு சரியான முடிவுகள் எடுக்கப்படும். ரெட்பாம் முறைப்படி மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக வரி விதிக்க ஆட்சியருடனும், அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.கே.நகர் தனசேகரன்: இந்த தீர்மானம் வரும்போது அதை மாற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நேரமில்லா நேரத்தில் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு (திமுக) பேசும்போது, ”எனது வார்டில் 15 ஆயிரத்து 400 மின்கம்பங்கள் உள்ளன. அதில் 9000 மின்கம்பங்கள் மாற்ற ஒப்பந்த பணி கொடுத்து ஒரு ஆண்டு ஆகிறது. ஆனால் பணியே நடக்கவில்லை. மின்சார துறையில் புதிய ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதில் அதிகாரிகள் திட்டமிட்டு யாரையும் சேர்ப்பதில்லை. சாலைகள் தற்போது வேலை செய்ய வேண்டாம் என முதல்வர் கூறியிருந்தார். ஆனால் பலர் சாலை பணி செய்வதால் மழை நீர் தேங்குகிறது. அதனால் தண்ணீர் நிற்கிறது. கலைஞர் சிலை மண்டல அலுவலகத்தில் உட்புறம் வைத்த அதிகாரிகள் அனுமதி தர மறுக்கின்றனர்” என்றார்.

The post சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்சேபனைக்குரிய நிலங்கள் தவிர மற்ற நிலங்களில் வசிப்பவருக்கு தற்காலிக வரிவசூல் செய்ய வேண்டும்: கவுன்சிலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Corporation ,Chennai ,Chennai Municipal Council ,Mayor ,Priya ,Deputy ,Mahesh Kumar ,Commissioner ,Radhakrishnan ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...