×

குடல் அழற்சி நோய்!

நன்றி குங்குமம் டாக்டர்

இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களில், IBS எனும் குடல் அழற்சி நோயும் ஒன்று. இது பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயாகும். இது உணவு உண்டதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டக் கூடிய ஒன்றாகும். உலகளவில் சுமார் 20 சதவீதம் பேர் இந்த IBS நோயால் அவதிப்படுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நோயின் தன்மை, அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர்
ஆர். கண்ணன்

குடல் அழற்சி நோய் என்றால் என்ன…

குடல் அழற்சி நோய் என்பது குடலின் செயல்பாடு மற்றும் இயக்கத்தில் ஏற்படும் குறைபாடு ஆகும். இது IBS (Irritable Bowel Syndrome) எனப்படும். இந்த நோயால் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். பொதுவாக 25 – 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் IBS -ஆல் பாதிக்கப்படுகின்றனர்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடலில் தசை அசைவுகள் சீரற்றுப் போவதோடு அவ்வசைவுகள் ஒருமுகப்படுவது இல்லை.

இதனால் இயல்பாக கழிவு மற்றும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றுவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் சிறுகுடலில் நச்சுப்பொருளும் பாக்டீரியா போன்ற கிருமிகளும் சளியும் தேங்கத் தொடங்குகிறது. இவ்வாறு தேங்கும் கழிவுப் பொருட்கள், வாயு மற்றும் மலவெளியேற்றத்தை தடுக்கின்றன. இதனால் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஏற்படுகின்றன.

IBS வகைகள்

1.பேதியுடன் கூடிய அழற்சி (IBS -D)
2.மலச்சிக்கலுடன் கூடிய அழற்சி (IBS -C)
3.இருவகைகளும் இணைந்தது (IBS -Mixed).

காரணங்கள்

1.சீரற்ற வாழ்க்கை முறை, உணவு ஒவ்வாமை, Antibiotics, பேதி மருந்து போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதும் காரணமாகும்.

2.குடல்பகுதியில் அதிகளவு உள்ள பாக்டீரியாக்கள் வைரஸ் போன்ற நுண்கிருமிகளும் இதற்குக் காரணமாகலாம்.

3.குடற்பகுதியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் (Serotonin) இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

4.குடல் பகுதியில் இயற்கையாகக் காணப்படும் நுண்ணுயிர்களின் சமநிலை மாறிவிடுவதும் காரணமாகலாம். (Alteration in gut Microbes)

5.மரபணுக் கோளாறு.

6.அதிகமான மன அழுத்தமும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அறிகுறிகள்

1.வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
2.உணவு உண்டபின் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்.
3.உணவு உண்டபின் உடனடியாக மலம் வெளியேறுதல்
4.மலத்தை வெளியேற்றிய பிறகு வலி குறைதல்
5.வயிற்றுப் பொருமல்
6.அதிகமான வாயுப்போக்கு
7.மலத்துடன் சளி வெளியேறுதல்
8.உணவு ஒவ்வாமை
9.உடல் எடை குறைவு
10.குமட்டல்
11.தலைவலி.

பரிசோதனை முறை

குடல் புற்றுநோய், உணவு ஒவ்வாமை (Lactose intolerance)

குடல்புண் (Ulcerative Colitis) ஆகியவை IBS நோய்க்குரிய அதே அறிகுறிகளைக் கொண்டுள்ளதால் IBS ஐ திட்டவட்டமாக அறிந்து கொள்ள சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

மலப் பரிசோதனை (Stool – Routine, Culture & Sensitivity)

Endoscopy மற்றும் Colonoscopy எனப்படும் பரிசோதனை மூலம் குடல்புண் (Ulcerative Colitis) Cnohn Disease), காசநோய் மற்றும் புற்றுநோய் இல்லை என்று கண்டறிந்து IBS என்று முடிவு செய்யலாம்.CT- Scan மூலமும் குடல் புற்றுநோய், குடல்புண் போன்றவை இல்லை என்று கண்டறியலாம்.

IBS ஆபத்தானதா

IBS உடலுக்கு ஆபத்தினை உருவாக்கும் நோய் அல்ல. ஆனால் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய நோய்நிலையாகும். இதனால் மனஅழுத்தம் மேலும் அதிகமாகும். இது குடல் புற்றுநோய் அல்லது குடல் வீக்க நோய் (Inflammatory Bowel Disease) போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்காது.

எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

*நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் குறிப்பாக சிவப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி, சோளம் உண்ண வேண்டும்.

*பழவகைகளில் ஆப்பிள், மாதுளை

*கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள்.

*வாயுவை உண்டாக்கும் உணவுகளை அளவோடு உண்ண வேண்டும் (பீன்ஸ்,

*பிராக்கோலி, முட்டைகோஸ்)

*அரோட் கஞ்சி, மோர், போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.

*மலசிக்கல் உள்ளவர்கள் அதிகப்படியான நார்ச்சத்து உள்ள உணவு வகைகளையும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீர் குறைந்தது 2 லிட்டர் அளவாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

*பால், டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

*காய்கறி, பழங்களில் உள்ள தோல் பகுதியை தவிர்க்க வேண்டும்.

*காரமான மசாலா பொருட்கள் தவிர்க்கணும்.

*வில் செய்த உணவுகள் தவிர்க்க வேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளும் முறை

*குறைந்த அளவு உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

*உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

*அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது.

*அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றம்

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

*எந்த காரியத்திலும் பதற்றமும், அவசரமும் இருக்கக்கூடாது.

*மன அழுத்தத்தைக் குறைக்க தியானபயிற்சிகளை (Yoga & Meditation) செய்ய வேண்டும்.

*தேவையற்ற மனக்கவலைகளைப் போக்க வேண்டும்.

*தேவையான அளவு 6 முதல் 7 மணிநேரம் தூங்க வேண்டும்.

IBS எனப்படும் குடல் அழற்சி நோயிலிருந்து குணமடைய மேலே கூறப்பட்டுள்ள உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் தியானப் பயிற்சிகளை சரியாக பின்பற்றி முழுவதுமாக குணமடையலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி

The post குடல் அழற்சி நோய்! appeared first on Dinakaran.

Tags : Dr.Kumkum ,Dinakaran ,
× RELATED ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!