×

தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே புக்கிங் சென்டருடன் ரயில் நிறுத்தம் அமைக்கப்படுமா?

*பயணிகள் பெரும் எதிர்பார்ப்பு

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே புக்கிங் சென்டருடன் ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மதுரையில் இருந்து போடி வரை 90.5 கிமீ தூரத்திற்கான மீட்டர் கேஜ் ரயில்சேவையானது கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செயல்பட்டது. நாடு முழுவதும் உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, அகல ரயி்ல்பாதையாக மாற்ற அப்போதைய ரயில்வே துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, மதுரையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில்சேவை 2010ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, பணிகள் முடிந்து முதற்கட்டமாக கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை முதற்கட்டமாக ரயில்சேவை துவக்கப்பட்டது. இதனையடுத்து தேனியில் இருந்து போடி வரை ரயில்வே பணிகள் முற்றிலுமாக முடிவடைந்ததால் தற்போது மதுரையில் இருந்து போடி வரை அகலரயில் சேவை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து போடி வரை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரயில்சேவையானது தற்போது, போடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, வேலூர் வழியாக சென்னைக்கு வாரம் மூன்று முறை சென்று வரும் வகையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சரக்கு ரயில் போக்குவரத்தும் தற்போது துவங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதனால் தேனியில் இருந்து சென்னைக்கு செல்லும் முதியோர் பலர் இந்த ரயில்சேவையை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மதுரையில் இருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரயில்சேவை இருந்தபோது, தேனியில் தற்போதுள்ள ரயில்வே நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக ரயில்வே நிறுத்தம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அகல ரயில்பாதை சேவை வந்தபிறகு, ஏற்கனவே, செயல்பட்டு வந்த பல ரயில்நிறுத்தங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது மதுரையிலிருந்து புறப்படும் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி. ஆண்டிப்பட்டி, தேனி , போடி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்து வரும் ரயிலானது தேனி கலெக்டர் அலுவலகம் அருகே நிற்க வாய்ப்பில்லாமல் நேரடியாக தேனி ரயில்நிலையத்திற்கு சென்று விடுகிறது தேனி ரயில் நிலையத்தில் இருந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சுமார் 4 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதேபோல,சின்னமனூர், பெரியகுளம் பகுதிகளை சேர்ந்த ரயில் பயணிகள் தேனியில் இருந்து சென்னை செல்ல வேண்டுமானால் தற்போதுள்ள தேனி ரயில்நிலையத்திற்கு வந்து செல்ல பெரும் சிரமம் உள்ளது.

அதேசமயம், தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ரயில் நிறுத்தத்தை ஏற்படுத்தினால், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மட்டுமல்லாமல் பெரியகுளம், சின்னமனூர் பகுதி மக்கள் தேனி புதிய பேருந்து நிலையம் வந்து,அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில் நிறுத்தம் செயல்பட்டால் ்அந்த ரயில்நிலையத்திற்கு ஷேர் ஆட்டோக்களில் கூட பயணித்து ரயில்நிறுத்தத்திற்கு வந்து செல்ல வசதி ஏற்படும் என்பதால் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே 2010ம் ஆண்டு வரை செயல்பட்ட ரயில் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்

இதுகுறித்து வினோரா பவுண்டேசன் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.வி.ஆர்.ராஜன் கூறியதாவது: தேனியில் இருந்து மதுரை, சேலம், சென்னைக்கு ரயில் மூலமாக பயணிக்கும் ரயில்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் இருந்து காலை நேரத்தில் தேனிக்கு புறப்பட்டு வரும் ரயில் சேவையானது மிகவும் பலனுள்ளது. அதேசமயம், மதுரையில் இருந்து ஏராளமான அரசு அலுவலர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிய நாள்தோறும் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

மதுரையில் இருந்து தேனி வரும் ரயில் மீட்டர் கேஜ் ரயில் சேவை இருந்தபோது, கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில் நிறுத்தம் செயல்பட்டது போல தற்போதும் கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில் நிறுத்தம் மற்றும் ரயில் புக்கிங் சென்டர் அமைத்தால் ரயில் பயணிகள் பெரும் பயனடைவர். மேலும், காலையில் மதுரையில் இருந்து போடிக்கு புறப்படும் அதேநேரத்தில் போடியில் இருந்து மதுரைக்கு ஒரு ரயிலை இயக்கினால் போடி, தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து மதுரையில் பணிபுரியும் பணியாளர்கள் மதுரை செல்ல வசதியாக இருக்கும்.

எனவே, தற்போது மதுரையில் இருந்து போடிக்கு ஒருமுறை மட்டும் இயக்கப்படும் ரயில்சேவையை காலை நேரத்தில் போடியில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து போடிக்கும் புறப்படும் வகையில் ரயில் சேவையை துவக்க வேண்டும். மேலும் போடியில் இருந்து வாரம் மூன்று முறை சென்னை சென்று வரும் ரயில் மற்றும் போடியில் இருந்து மதுரை வரை நாள்தோறும் இயக்கப்படும் ரயில் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தேனி நகர், பெரியகுளம், சின்னமனூர், கண்டமனூர் பகுதி ரயில் பயணிகள் பெரும் பயனடைவர். இதனை தென்னக ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டு இதற்கான அனுமதியை விரைவில் வழங்கி ரயில்பயணத்தை மேம்படுத்த வேண்டும், என்றார்.

The post தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே புக்கிங் சென்டருடன் ரயில் நிறுத்தம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Theni Collector ,Theni ,Dinakaran ,
× RELATED தேனி கலெக்டர் வளாகத்தில் நுழைவுவாயில் கட்டும் பணி துவக்கம்