×

இலக்காக ரூ.328 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ₹246 கோடி புதிய தொழில் முதலீடு ஈர்ப்பு

*விவசாயம் சார்ந்த தொழில் அதிகம் வர வேண்டும்

*திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இலக்காக ரூ.328 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை ரூ.246 கோடி அளவில் புதிய தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த தொழில் அதிகம் வர வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில் உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்குடன் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்ட அளவிலான இந்த சிறப்பு கூட்டமான நேற்று திருவாரூர் காரைக்காட்டு தெருவில் இயங்கி வரும் தனியார் ஹோட்டலில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலும், நாகை எம்பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சாரு பேசுகையில், தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை சார்பில் கடந்த ஆண்டு அதிக அளவு தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்டன. மாவட்டத்திற்கு நடப்பாண்டிற்கு தொழில் முதலீடு இலக்காக ரூ.328 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் ரூ 246 கோடியே 26 லட்சத்திற்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் தொழில் துவங்குவதற்கு முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு வருவாய்த்துறை, வேளாண்துறை, மின்துறை, சுற்றுச்சூழல் துறை, தீயணைப்பு துறை, உணவு பாதுகாப்புதுறை உள்ளிட்ட 16 துறைகளிடம் இருந்து சிங்கிள் விண்டோஸ் என்ற முறையில் ஆன்லைன் மூலமாக தொழில் துவங்குவதற்கான சான்று மற்றும் தடையில்லா சான்று பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் சிறுகுறு தொழில்களுக்காக சான்று பெற்று கொடுப்பதற்கு சிங்கிள் விண்டோஸ் போல மாநிலத்தில் பெரிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு அரசு சார்பில் கைடன்ஸ் மற்றும் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாலும், மாநிலத்தில் அதிகம் பேர் உயர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை பெற்றுள்ளதாலும், பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்து கொடுப்பதற்கு சிறுகுறு நிறுவனங்கள் இருந்து வருவதாலும் உடனடியாக தொழில்களை துவங்குவதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் இருந்து வருகிறது.

பிற மாநிலங்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளும் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முன் வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் பெரிய தொழிற்சாலைகளுக்கு சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதால் மாவட்ட அளவில் இதுபோன்று கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பின்படி 13 சதவீதம் வேளாண் சார்ந்த பணிகளும், 33 சதவீதம் உற்பத்தி சார்ந்த பணிகளும், 54 சதவீதம் சேவை சார்ந்த பணிகளுமாக இருந்து வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு அனைத்து தொழில்களும் சமமாக இருக்க வேண்டும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீதம் விவசாயம் சார்ந்த தொழிலாக இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக மதிப்பு கூட்டு பொருள்களை உருவாக்குவதற்கு சிறு, குறு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

மேலும் அரசு சார்பில் சிறுகுறு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் துவங்குவதற்கு முன்வர வேண்டும் என்று தொழில் முனைவோர்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.இதில் தொழில் மைய உதவி இயக்குனர் செல்வம், பொது மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில், நகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், சங்கர், மற்றும் வங்கி மேலாளர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* 16 துறைகளிடம் இருந்து சிங்கிள் விண்டோஸ் என்ற முறையில் ஆன்லைன் மூலமாக தொழில் துவங்குவதற்கான சான்று மற்றும் தடையில்லா சான்று பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

* பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்து கொடுப்பதற்கு சிறுகுறு நிறுவனங்கள் இருந்து வருவதாலும் உடனடியாக தொழில்களை துவங்குவதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் இருந்து வருகிறது.

* திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீதம் விவசாயம் சார்ந்த தொழிலாக இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக மதிப்பு கூட்டு பொருள்களை உருவாக்குவதற்கு சிறு, குறு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

The post இலக்காக ரூ.328 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ₹246 கோடி புதிய தொழில் முதலீடு ஈர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...