×

தண்டவாளத்தில் இருந்து உயிருக்கு போராடியவர்; லோகோ பைலட் காப்பாற்றிய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

சேலம்: சேலம் அருகே ரயிலில் அடிபட்டு தண்டவாள பகுதியில் உயிருக்கு போராடிய வாலிபரை மற்றொரு ரயிலின் லோகோ பைலட் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜோலார்பேட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் (06845) தினமும் சேலம் வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் காலை 6.40 மணியளவில் தொட்டம்பட்டி ரயில்வே ஸ்டேஷனை கடந்து மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளம் அருகே, ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததௌ பார்த்த ஜோலார்பேட்டை-ஈரோடு ரயிலின் லோகோ பைலட் அருண்குமார் (37), உடனே ரயிலை நடுவழியில் நிறுத்தி அவரை மீட்டு மொரப்பூர் ஸ்டேஷன் ஆர்பிஎப் போலீஸ்காரர் வெங்கடாசலத்திடம் ஒப்படைத்தார். அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கச் செய்தார்.

இதுபற்றி சேலம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், தலையில் காயமடைந்து தண்டவாளம் அருகே கிடந்தவர், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கீரனூர் ஆணைச்சேரியை சேர்ந்த கர்ணன் மகன் சதீஷ் (30) என்பதும், இவர் தனது பெற்றோருடன் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள தெற்கு பணம்பில்லாநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. சதீசின் மனைவி முனீஸ்வரி, சென்னையில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக சென்று வசிக்கிறார். இதனால் அவரை பார்க்க எர்ணாகுளத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு செல்லும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கிடந்தது, தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவி முனீஸ்வரிக்கு தகவல் கொடுத்தனர். 7 மாத கர்ப்பிணியான அவர், தனது 5 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு கணவர் சதீசின் உடலை பார்த்து கதறி துடித்தார். அவரது உடலை பிரேதப்பரிசோதனை செய்து உறவினர்களிடம் சேலம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் ராமநாதபுரம் எடுத்துச் சென்றனர்.

The post தண்டவாளத்தில் இருந்து உயிருக்கு போராடியவர்; லோகோ பைலட் காப்பாற்றிய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Loco ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்