×

உள்ளாவூர் ஊராட்சியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் நடவடிக்கை: ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு

வாலாஜாபாத்: கால்நாடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாவூர் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஊராட்சி மன்ற தலைவர் உஷாதெய்வசிகாமணி ஏற்படுத்தினார். வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல். இந்நிலையில், உள்ளாவூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.

இந்த கால்நடைகளை உரிமையாளர்கள், முறையாக கட்டி வளர்க்காததால் பள்ளி வளாகம், ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், அங்கன்வாடி மையம் மற்றும் பிரதான சாலைகளின் மைய பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் தஞ்சமடைவதால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகின்றன. இவை மட்டுமின்றி கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் கால்நடைகள் அடிபட்டு விபத்துக்குள்ளாகும் நிலையும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம், கால்நடை வளர்ப்போர் முறையாக தங்களின் கால்நடைகளை கட்டி வளர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், இதுவரை கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை கட்டி வளர்ப்பதற்கான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற நிலையில் நேற்று ஊராட்சி முழுவதும் ஊராட்சி மன்ற தலைவர் உஷாதெய்வசிகாமணி, துணை தலைவர் பாஸ்கர், செயல் அலுவலர் அன்பரசு ஆகியோர் முக்கிய சாலைகள் மற்றும் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று கால்நடைகள் வளர்ப்போர் முறையாக கால்நடைகளை வளர்க்க வேண்டும், அவ்வாறு முறையாக கால்நடைகளை கட்டி வளர்க்காவிட்டால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நாளை முதல் முறையாக கால்நடைகளை கட்டி வளர்க்காவிட்டால், உரிமையாளர்கள் மீது மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என தெரிவித்தனர்.

The post உள்ளாவூர் ஊராட்சியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் நடவடிக்கை: ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Unaur panchayat ,panchayat ,Walajabad ,
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா