×

காஞ்சிபுரம் தாட்டித்தொப்பு பகுதியில் சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்

காஞ்சிபுரம்: தினகரன் செய்தி எதிரொலியால், காஞ்சிபுரம் அருகே சேதமடைந்த வேகவதி ஆற்றின் தரைப்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் 27வது வார்டு பகுதியில் தாட்டித்தோப்பு மற்றும் முருகன் பட்டு நெசவாளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் வழியில் வேகவதி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தரைப்பாலம் முழுவதுமாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது‌.

இதனைதொடர்ந்து, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரும் ஆபத்தான முறையில் இந்த பாலப்பகுதி வழியாக கடந்து செல்வது குறித்து கடந்த 27ம் தேதி, தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. அதன்படி, நேற்று பொதுப்பணித்துறை சார்பில் வேகவதி ஆறு தரைப்பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. நீண்ட காலமாக தீராமல் இருந்த பிரச்னையை வெளிக்கொண்டு வந்த தினகரன் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post காஞ்சிபுரம் தாட்டித்தொப்பு பகுதியில் சேதமடைந்த வேகவதி ஆற்று பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vegavati river bridge ,Thattiphoppu ,Kancheepuram ,Kanchipuram ,Dhinakaran ,Vegavathy river ,Vegavati river ,Thattittoppu ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின்...