×

காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏலம் விடாமல் பழுதாகும் வாகனங்கள்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின் மெத்தனத்தால் பழுதாகும் வாகனங்களை ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காலாவதி வாகனங்கள் ஏலம் விடாமல் வீணாகின்றன. இதனால், அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை பார்வையிடவும், அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்கவும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் வழங்கப்படுகின்றன. நலத்திட்ட பொருள்களை கொண்டு செல்ல லாரி, மினி லாரி போன்ற சரக்கு வாகனம், மருத்துவத்துறைக்கு ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, குளிர்சாதன வசதியுடன் கூடிய வாகனங்களை அரசு வழங்கி உள்ளது. மேலும் காஞ்சிபுரம், வேளாண், பத்திரப்பதிவு, நில அளவை, போலீஸ், வட்டார வளர்ச்சி அலுவலகம், தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சி, சுகாதாரத்துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டிருந்தாலோ, பராமரிப்பு செலவு அதிகமாகும் என்பதால் காலாவதி வாகனம் என அறிவிக்கப்படும்.
அவற்றிற்கு தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத்துறை அதிகாரியின் சான்று பெற்று நிறுத்த வேண்டும். பின்னர், அந்த வாகனத்தின் ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் இயங்கி வரும் அரசு தானியங்கி பணிமனை இயக்குநருக்கு அனுப்பி வைத்து, வாகனத்தை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் இந்த உத்தரவை எந்த துறையிலும் பின்பற்றுவதில்லை.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாழடைந்து பல ஆண்டுகள் ஆகியும் ஏலம் விடப்படாமல் வீணாகின்றன. குறிப்பாக உள்ளாட்சி, மருத்துவத்துறை போன்ற துறைகளின் வாகனங்கள் அதிகம் பழுதடைந்துள்ளன. வாகனங்கள் பழுதடைந்து ஓரிரு மாதங்களில் ஏலம் விட்டால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஏலம் போகும். அவ்வாறு செய்யாமல் பல ஆண்டுகள் கழித்து ஏலம் விடுவதால், வெறும் ரூ.3 ஆயிரம் முதல் 75 ஆயிரம் மட்டுமே விலை போகிறது. இப்படி பழைய வாகனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாழாகின்றது.இதுகுறித்து, அரசு தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் விசாரித்தபோது, பல துறைகளில் வாகனங்களின் ஆர்சி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை. இதனால் ஏலம் விடுவதில் தாமதமாகிறது. அப்படியே ஆவணங்கள் இருந்தாலும், அந்த வாகனத்தை மதிப்பீடு செய்து ஏலம் விட கோப்புகள் ஒவ்வொரு துறையாக சென்று, இறுதியாக இயக்குநரின் அலுவலகம் வருவதற்குள் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலம் ஆகிறது.

அதற்குள் அந்த வாகனத்தின் பெரும்பகுதி மக்கி விடுவதால், ஏற்கனவே மதிப்பீடு செய்த தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் முன் வருவதில்லை. அதனால் தொகையை குறைத்து மறு ஏலம் விடவேண்டியுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி மற்றும் பிற துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தானியங்கி மோட்டார் வாகன பராமரிப்பு துறையை சார்ந்தவர்கள், மிகவும் பழுதடைந்த வாகனங்களை மதிப்பீடு செய்ய வருவதில்லை. அவர்கள் வருவதற்கு எல்லா செலவுகளையும் நாங்களே ஏற்க வேண்டியுள்ளது. நாங்கள் அனுப்பும் கடிதத்துக்கும் முறையாக பதில் வருவதில்லை என்கின்றனர். இப்படி, ஒரு வரை ஒருவர் மாறிமாறி குறை கூறுவதிலேயே அதிகாரிகள் காலத்தை கழிக்கின்றனர். அதிகாரிகள் காலம் கடத்துவதை விட்டுவிட்டு காலாவதியான வாகனங்களை ஏலம் விட்டு, உடனடியாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தர வேண்டும். கடமையை உணர்ந்து அதிகாரிகள் இனியாவது வாகனங்களை ஏலம் விட முன்வர வேண்டும்’ என்றனர்.

 

The post காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏலம் விடாமல் பழுதாகும் வாகனங்கள்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் வேளாண் இயந்திரங்கள்...