×

ஆவடி காவல் ஆணையரகத்தில் சோதனை போதைப்பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

ஆவடி: போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய அதிரடி சோதனையில் 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் ஒழிப்பு சிறப்பு அதிரடி சோதனை நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட போலீசார் 15 குழுக்களாக பிரிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர். அம்பத்தூர், ஆவடி, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் இருந்த கடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் புகையிலை பொருட்கள் குட்கா, கூல்-லிப் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 128 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 17 கடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 17 கடைகளும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சோதனையின்போது மொத்தம் 125 கிலோ குட்கா, கூல்-லிப் மற்றும் பிற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிகளை மீறியவர்களுக்கு ரூ.1.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்பான, அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

* போதைப்பொருள் சோதனைக்கு சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் நியமனம்
ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. இதை கண்காணிக்க காவல் நிலையம் வாரியாக காவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீஞ்சூர்: காவலர்கள் சதீசன், உதயகுமார், உணவு பாதுகாப்பு அதிகாரி சுந்தரராமன்,
சோழவரம்: காவலர்கள் சையது முபாரக், பார்த்திபன், உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுகமது,
ஆவடி: காவலர்கள் டெல்லி, முரளி குமார், உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேசன்,
பூந்தமல்லி: காவலர்கள் செந்தில், சரவணன், உணவு பாதுகாப்பு அதிகாரி வேலவன்,
திருவேற்காடு: காவலர்கள் மணிகண்டன், வேலு, உணவு பாதுகாப்பு அதிகாரி கார்மேகம்.
அம்பத்தூர்: காவலர்கள் மணவாளன், சதீஷ், உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா முகமது,
திருவள்ளூர்: உணவு பாதுகாப்பு அதிகாரி சிவசங்கர்,
மாதவரம்: உணவு பாதுகாப்பு அதிகாரி கஸ்தூரி,
வில்லிவாக்கம்: உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன்,
புழல்: உணவு பாதுகாப்பு அதிகாரி சிவசங்கரன்.

The post ஆவடி காவல் ஆணையரகத்தில் சோதனை போதைப்பொருட்கள் விற்ற 17 கடைகளுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Avadi Police ,Food Safety Department ,Aavadi ,
× RELATED அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல்,...