×

இன்ஸ்டன்டாக சமைத்து ருசியுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

ரெடி டூ குக் முறையில் சிறு தானிய உணவுகளை ‘ஸ்மால் மில்லட்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த ராஜலஷ்மி. இவரின் சிறுதானிய உணவு வகைகளை உடனடியாக சமைத்து சாப்பிடுவது போல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சிறு தொழிலாக ஆரம்பித்து இன்று சென்னை மட்டுமில்லாமல், மற்ற ஊர்களுக்கும் இவரின் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வெற்றி பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் செஞ்சிகோட்டை. நான் பள்ளிக் கூடம் முடிச்சதும் கல்லூரி படிப்பதற்காக சென்னைக்கு வந்துட்டேன். கல்லூரி படிப்பிற்கு பிறகு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். திருமணத்திற்கு பிறகு நேரம் சரிவராத காரணத்தால் என்னால் வேலையை தொடர முடியவில்லை. என் கணவருக்கு சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அவர் ேவலைக்கு செல்வதால் அவரால் சொந்தமாக தொழில் செய்வதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

மேலும் இது குறித்து நானும் என் கணவரும் பல முறை பேசி இருக்கிறோம். இதற்கிடையில்தான் மதுரையில் சிறு தானிய உணவுகள் குறித்து ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நானும் என் கணவரும் சென்றிருந்தோம் அங்கு சென்ற பிறகுதான் சிறு தானிய உணவுகள் குறித்து நிறைய தெரிந்து கொண்டோம். அந்த கருத்தரங்கிற்கு சென்று வந்த பிறகு இதையே ஒரு தொழிலாக செய்ய முடிவு செய்தோம். அதனால் அதுகுறித்து பல தகவல்களை தேட துவங்கினோம்.

அதைத் தெரிந்து கொண்டு என் மாமனார், மாமியார் இருவரும் அவர்களுக்கு சிறுதானியம் குறித்து தெரிந்த விவரங்களைப் பற்றி எங்களிடம் பகிர்ந்தார். அது எங்களுக்கு பெரிய சப்போர்ட்டா இருந்தது. அதன் பிறகுதான் எங்களுக்கு இதை ஒரு தொழிலாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது’’ என்றவர் இன்ஸ்டன்ட் உணவுகள் நிறுவனம் துவங்கியது பற்றி விவரித்தார்.

‘‘இப்போது யாரைக் கேட்டாலும், உணவில் சிறுதானியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள். இந்த உணவின் நன்மைகளை பற்றி பலரும் தெரிந்து வைத்துள்ளனர். இதற்கான சந்தை அதிகரித்து இருப்பதால், விவசாயிகளும் அதற்கான விளைச்சல்களை அதிகரித்து வருகின்றனர். எல்லாவற்றையும் விட நாம் அனைவரும் இயற்கை உணவினை விட்டுவிட்டு துரித உணவுகளுக்கு பழகிவிட்டோம். அதன் விபரீதம் தெரிந்த பிறகு மீண்டும் நம்முடைய பாரம்பரிய உணவினை தேட ஆரம்பித்து இருக்கிறோம்.

உணவுப் பழக்கத்தினால் நாம் பல நோய்களால் அவதிப்பட்டும் வருகிறோம். நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகள் நம்முடைய பாரம்பரிய உணவில் உள்ளது. இதில் முக்கியமானதாக இருப்பது சிறு தானிய உணவு வகைகள்தான். மற்ற பயிர்களை போல் அல்லாமல் எல்லா கால கட்டங்களிலும் விளையக்கூடிய பயிராகவும் இந்த சிறு தானியங்கள் உள்ளது. அதோடு இந்த உணவு வகைகள் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருப்பதால், மக்களும் இந்த உணவு வகைகளின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கின்றனர்.

கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, தினை, சாமை, ராகி, குதிரை வாலி இவையெல்லாமே சிறுதானிய உணவுகள். இந்த உணவினை நம்முடைய அரிசி சாதம் போல் உடனடியாக சமைக்க முடியாது. அதனால் உடனடியாக சமைக்கக்கூடிய வகையில் நாங்கள் உணவுப் பொருட்களை தயார் செய்து கொடுத்தால் சரியாக இருக்கும் என நினைத்தோம். முதலில் அதனை நாங்க வீட்டில் தயார் செய்துப் பார்த்தோம். பல டிரையலுக்கு பிறகு அதற்கான சரியான பதம் தெரிந்து கொண்டோம்.

உணவுகள் தயாராகிவிட்டது. ஆனால் அதனை விற்பனைக்கு கொடுக்கும் போது, அதனை எவ்வளவு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிக்க வேண்டும். நாங்கள் எந்த வித ரசாயனங்களும் சேர்க்காமல் கொடுப்பதால், அதன் தரம் மாறாமல், அதே சமயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் உணவு பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைத்தோம். அதன் படி எங்களின் ஆய்வில் எந்த ரசாயனமும் சேர்க்காமல் 6 மாதம் வரை வைத்து சாப்பிடலாம்’’ என்றவர் சிறுதானியங்கள் மட்டுமில்லாமல் மற்ற பொருட்களில் இன்ஸ்டன்ட் உணவுகளை தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

‘‘பொதுவாக சிறுதானியங்கள் மட்டுமே நம்முடைய உடலுக்கு நன்மை தருபவை இல்லை. அதை தவிர மற்ற உணவுகளும் ஆரோக்கியமான முறையில் சமைத்தால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த வகையில் கருப்பு உளுந்து களி மிக்ஸ், கம்பு கஞ்சி மிக்ஸ், சர்க்கரை நோய்க்கான கஞ்சி மிக்ஸ், மூங்கில் அரிசி சப்பாத்தி பூரி மிக்ஸ் போன்றவற்றை தயாரித்து வருகிறோம். நாங்கள் செய்கிற உணவுகள் எல்லாம் ரெடி டூ குக் முறையில் இருப்பதால் வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்குகின்றனர்.

வீட்டில் இருந்துதான் எங்களின் பிசினஸை துவங்கினோம். நான் உணவுகளை தயாரிக்க என் கணவர் அதனை கடைகளுக்கு டெலிவரி செய்து வந்தார். முதலில் எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கடைகளுக்கு தான் கொடுத்தோம். அங்கு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் நன்றாக இருப்பதாக சொன்னதால், அந்த கடைக்காரர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் ஆர்டர் அமைத்து கொடுத்தார்கள். அது எங்களுக்கு பெரிய அளவில் சப்போர்ட்டா இருந்தது. வியாபாரம் பெருக ஆரம்பித்ததால், நேரடியா சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய துவங்கினோம். மேலும் ஆர்டர்கள் அதிகரித்தால், வீட்டில் செய்ய முடியாது என்பதால், இதற்கான இடம் அமைத்து அங்கு பெண்களை வேலைக்கு அமர்த்தினோம். இப்போது எங்களின் சிறுதானிய இன்ஸ்டன்ட் உணவுகள் சென்னை மட்டுமில்லாமல் பல ஊர்களிலும் விற்பனையாகிறது.

சாதாரண குடும்பத்தில் இருந்து சொந்தமாக தொழில் தொடங்கி தற்போது பல பேருக்கு வேலை கொடுக்கிற இடத்தில் இருப்பதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். அதன் அடிப்படையில் நாங்க சிறுதானியம் வாங்கும் விவசாயிகளின் பிள்ளைகளை தேர்வு செய்து அவர்களுக்கு படிப்பிற்காக ஒரு தொகையினை வழங்கி வருகிறோம்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் ராஜலஷ்மி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post இன்ஸ்டன்டாக சமைத்து ருசியுங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED வாழ்க்கையை மாற்றி அமைத்த கடற்புல் கூடைகள்!