×

நெல்லை சுற்று வட்டாரங்களில் உழவுக்கே ரூ.10 ஆயிரம் செலவழிக்கும் விவசாயிகள்

*பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், நிலத்தை பண்படுத்த உழவுக்கே ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு பிசான நெல் சாகுபடியும், இவ்வாண்டு கார் சாகுபடியும் பொய்த்து விட்டன. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையும் இன்னமும் அணைகள் நிரம்பும் அளவுக்கு பெய்யவில்லை.

இருப்பினும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளிலும் நீர்மட்டம் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. குளங்கள், கிணறுகளில் தற்போது தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளை நம்பிக்கையோடு நடத்தி வருகின்றனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வயல்களில் தொழி அடித்தல், நாற்றங்கால் அமைத்தல், நெல் பாவுதல், நீரை வடிகட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நெல்லை கால்வாய் பாசன பகுதிகளுக்கு உட்பட்ட பாலாமடை, குப்பக்குறிச்சி, அலங்காரப்பேரி, அருகன்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது உழவு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு இவ்வாண்டு உழவுக்கான செலவு மட்டுமே ரூ.10 ஆயிரத்தை தாண்டும் நிலையில் உள்ளது. நெல்லை, கோடகன், பாளையங்கால்வாய் பாசன பரப்பில் கடந்த ஓராண்டாகவே பாசனத்திற்கு கடைமடை வரை தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால், விவசாய நிலங்கள் காய்ந்து போய் காட்சி அளிக்கின்றன.

சாகுபடியே நடக்காத வயல்களில் காட்டு கோரை புற்கள் மற்றும் செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இப்போது சாகுபடிக்கு வயல்களை பண்படுத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் இருப்பதால், மொத்தம் 3 உழவுக்கு பதிலாக 4 உழவு செய்ய வேண்டியுள்ளது. காட்டு ேகாரை புற்களை மண்ணோடு அழுத்தி உழ வேண்டியதன் அவசியம் காரணமாக கூடுதல் உழவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு உழவுக்கு டிராக்டருக்கு ரூ.2 ஆயிரத்து 400 செலுத்த வேண்டியுள்ளது. தற்போது 4 உழவு காரணமாக அதற்கே ரூ.10 ஆயிரம் செலவாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வரப்பு வெட்டுதல், நடுவை, களைபறித்தல் என பல்ேவறு செலவுகள் காத்திருக்கின்றன.

இதுகுறித்து குப்பக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், ‘‘நெல்லை கால்வாய் பாசன பரப்பில் பல வயல்கள் இப்போது காய்ந்து கரடுமுரடாக உள்ளன. நிலங்களை நன்கு உழுதால் மட்டுமே நெல் விதைகளை வீச முடியும். பருவமழை காலதாமதம் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் திறப்பதில் சுணக்கம் ஆகியவை காரணமாக சாகுபடியை நாங்கள் முறையாக மேற்கொள்ள முடிவதில்லை. சாகுபடி காலதாமதம் ஆகும்போது உழவும், நடவும் சரியிருக்காது. நோய்த் தாக்குதல் அதிகம் இருக்கும். மகசூலும் குறையும். எனவேதான் குளங்களுக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட கேட்டுக் கொண்டுள்ளோம்.

குப்பக்குறிச்சி குளத்தை பொறுத்தவரை விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி இருபோக சாகுபடியை நடத்தி விடுவர். கடந்தாண்டு தண்ணீர் விநியோகம் குறைவு பல விவசாயிகள் சாகுபடி செய்ய முடியவில்லை. வயல்கள் காய்ந்து கிடப்பதால் 4 உழவையும் நடத்தி முடிக்கவே கூடுதல் நேரம் செலவாகிறது. சில சமயங்களில் வயல்பகுதிகளில் அழுத்தி உழும்போது டிராக்டர்களின் ரோட்டேட்டர் நின்று விடுகிறது. பேரிங் கட்டாகிவிட்டால், மீண்டும் உழவை தொடங்கிட 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே தற்போது குளத்திற்கு வரும் தண்ணீரை பயன்படுத்தி சாகுபடியை விரைந்து செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

The post நெல்லை சுற்று வட்டாரங்களில் உழவுக்கே ரூ.10 ஆயிரம் செலவழிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Paddy ,
× RELATED தூத்துக்குடி தனியார் ஆலையில் திடீர்...