தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பதப்படுத்தும் ஆலையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததில் அங்கு பணியாற்றிய 28 பெண்கள் மயங்கினர். தூத்துக்குடி மாவட்டம், புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே தனியார் மீன்பதப்படுத்தும் ஆலை செயல்படுகிறது. இங்கு பதப்படுத்தப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இங்குள்ள இன்ஸ்டன்ட் குவிக் ப்ரோசன் பிளாண்டில் திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றிக்கொண்டது.
யாரும் கவனிக்காததால் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த ‘தெர்மோகோல் ஷீட்டில்’ தீப்பற்றியது. தீ மளமளவென்று இயந்திரங்களுக்கு பரவியதால் அந்த அறை முழுவதும் புகை சூழ்ந்து புகை மண்டலமானது. இதனால் அந்த பிளாண்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த எமர்ஜென்சி கேட்கள் மூலம் வெளியேற முயன்றனர். இருப்பினும் கண் எரிச்சல், மூச்சுத்திணறலில் அடுத்தடுத்து 28 பேர் மயங்கி விழுந்தனர். பக்கத்து அறையில் வேலை பார்த்த ஆண் தொழிலாளர்கள் விரைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து தூத்துக்குடி சிப்காட், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி மற்றும் ஆறுமுகநேரியில் உள்ள டிசிடபிள்யூ நிறுவனத்தில் இருந்தும் மொத்தம் 5 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து 4 மணி ேநரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே புகைமண்டலத்தில் மயங்கிய 28 பெண் தொழிலாளர்களையும் மீட்டு, 3 தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். பலர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தீயணைப்பு வீரர் ஒருவரும் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து டிஆர்ஓ அஜய்சீனிவாசன் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மின்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்துவிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். உடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் வந்தனர். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். விபத்து குறித்து ஆலை பொதுமேலாளர் வேல்முருகன் கூறுகையில் ‘‘அமோனியா வாயு கசிவு ஏதும் ஆலையில் ஏற்படவில்லை. தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது’’ என்றார்.
The post தூத்துக்குடி தனியார் ஆலையில் திடீர் மின்கசிவால் தீ மூச்சுத்திணறி 28 பெண்கள் மயக்கம்: சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல் appeared first on Dinakaran.