×

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம், ₹30 லட்சம் பறிமுதல்: பிடிபட்ட குருவியிடம் விசாரணை

சென்னை: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டு, மண்ணடியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ தங்கம் மற்றும் ₹30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, குருவியாக செயல்பட்ட வாலிபரை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தங்கம் மற்றும் விலை உயர்ந்த மின்னணு பொருட்களான லேப்டாப், ஐ போன் போன்றவற்றை கடத்துவதில் ‘குருவிகள்’ என்ற பெயரில் பலரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கடத்தலில் ஈடுபடுவோர் நேரடியாக களமிறங்காது, பெரும்பாலும் இந்த குருவிகளை பயன்படுத்தியே தங்கள் காரியங்களை சாதித்து கொள்கிறார்கள்.

வேலையில்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து, கடத்தல் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். விபரீதம் அதிகம் என்ற போதிலும், கணிசமான பணம் மற்றும் வெளிநாட்டு பயணம் ஆகிய ஆசைகளில் குருவிக்கான பொறியில் அப்பாவிகள் பலரும் சிக்குகின்றனர். கடத்தலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் ஒரு கும்பல் நேற்று பிடிபட்டது. அதில் தொடர்புடைய சென்னை மண்ணடி மரக்காயர் லப்பை தெருவை சேர்ந்த அஷ்ரப் (30) என்பவர் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் குருவியாக வேலை பார்த்துள்ளார். இவர், கடந்த 6 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிக்கிறார். இதுபற்றி அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், 1.5 கிலோ தங்கம், ₹30 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள வருவாய் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பாரிமுனை, மண்ணடி பகுதியில் உள்ள ‘குருவிகளுக்கு’ பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம், ₹30 லட்சம் பறிமுதல்: பிடிபட்ட குருவியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manadi… ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...