×

நாடாளுமன்ற தேர்தலுக்கான பயிற்சிக் களம் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சேலம் மாநாடு அமைய உதயநிதி அழைக்கிறார்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சேலம் மாநாடு அமைய உதயநிதி அழைக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சமூகநீதிக் காவலர், இந்திய ஒன்றியத்தின் 7வது பிரதமர் வி.பி.சிங்கின் உருவச் சிலையை சென்னையில், அதுவும் நான் பயின்ற மாநிலக் கல்லூரியில் முதல்வர் என்ற முறையில் திறந்து வைக்கும் பெருமிதமான நிகழ்வு நடைபெறுகிறது. கலைஞருடன், வி.பி.சிங்கும், என்.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களும் பார்வையிட்ட தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணியில் திமுகவின் இளைஞரணி வீறுநடை போட்டு அணிவகுத்து வந்தபோது மிகப் பெரிய அளவில் எழுச்சி ஆரவாரத்தைக் காண முடிந்தது.

அதன்பிறகு, 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டிலும், அதே ஆண்டு முப்பெரும் விழாவை ஐம்பெரும் விழாவாக கொண்டாடியபோது, தலைநகர் சென்னை குலுங்க மற்றொரு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த மூன்று பேரணிகளிலும் உங்களில் ஒருவனான என் தலைமையில் பட்டாளத்துச் சிப்பாய்கள் போல திமுக இளைஞரணியினர் வெண்சீருடையில் வீறுநடை போட்டு வந்ததை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கண்டு மகிழ்ந்ததையும், அது குறித்து அவர் ஆச்சரியத்துடன் வினவியபோது, “என் மகன்“ என்று கலைஞர் சுட்டிக்காட்டி, என் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியதையும் மறக்க முடியாது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. டிசம்பர் 17ம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம்.

பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி, வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக் கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப் போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம்.

இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் திமுகவும், அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும். இவற்றை மனதில் கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்ட செயலாளர்கள் செயலாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் கலைஞர்.

அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்கு தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டு தலைவர் உதயநிதி அழைக்கிறார். திமுகவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு – சிவப்புக் கடலினைக் காணட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான பயிற்சிக் களம் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சேலம் மாநாடு அமைய உதயநிதி அழைக்கிறார்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Salem ,India ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Udhayanidhi ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...