×

46வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார்: நடிகர் கமல், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து; தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு நடிகர் கமல், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், முதல்வருக்கு சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கினார்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ”எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் திமுக தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும்-அன்னையாரிடம் வாழ்த்துகளை பெற்றேன். அயராது உழைக்கவும்-அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதில், பொன்முடி, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பசரன், கே.ஆர்.பெரியகருப்பன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதி மாறன் எம்பி, இ.பரந்தாமன், மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, இ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர், மயிலை வேலு உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லம் மற்றும் சிஐடி காலனி இல்லத்திற்கு சென்று கலைஞர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் கனிமொழி எம்பி, பொன்முடி, ஆ.ராசா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தலைவர் கு.தியாகராஜன், சென்னை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராமபுரம் வி.ராஜேஷ், சென்னை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எம்.ஜாவித், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் ஜெயபிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட இளைஞர் அணியினர் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post 46வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார்: நடிகர் கமல், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து; தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Chief Minister ,M.K.Stalin ,Kamal ,DMK ,Tamil Nadu ,Chennai ,DMK Youth Team ,Udhayanidhi Stalin ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...