×

பறக்கும் ரயில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு பள்ளி மாணவன் ஆபத்தான பயணம்: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

சென்னை: பறக்கும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவன் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரயில்களின் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் அபாயகரமான பயணம் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தற்போது பறக்கும் ரயிலில் பள்ளி மாணவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொதுமக்களை பதற வைத்துள்ளது. தற்போது, சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் திடீரென பதற வைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்தார். 75 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பல ரயில் நிலையங்களை கடந்து மாணவன் தொங்கியபடி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் பள்ளி சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ, ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் ரயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் வலியுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த ரயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

The post பறக்கும் ரயில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு பள்ளி மாணவன் ஆபத்தான பயணம்: ரயில்வே போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...