புதுடெல்லி: தெலங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக கர்நாடகா அரசு விளம்பரம் கொடுப்பதாக தேர்தல் கமிஷனில் பா.ஜ புகார் தொிவித்து உள்ளது. தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கர்நாடகா காங்கிரஸ் அரசு ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதாகவும், அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜ நேற்று தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்துள்ளது.
ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கட்சித் தலைவர்கள் சுதன்ஷு திரிவேதி, ஓம் பதக் உள்ளிட்ட பாஜ பிரதிநிதிகள் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். பின்னர் பூபேந்தர் யாதவ் கூறும்போது,’ கர்நாடக அரசு கடந்த சில நாட்களாக தெலுங்கானாவில் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. எனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது அரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை பாஜ வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கர்நாடகா காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் பற்றி தெலங்கானாவில் விளம்பரம் கேட்டு செய்தது கர்நாடகா அரசிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக தலைமைச் செயலாளருக்கு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவதற்கு கர்நாடகா அரசு முன் அனுமதி பெறவில்லை. கர்நாடகா அரசு இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து தேவையான ஒப்புதல்கள் பெறும் வரை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது.
The post தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது தேர்தல் கமிஷனில் புகார்: பா.ஜ நடவடிக்கை appeared first on Dinakaran.